திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீதான வழக்கை ரத்து செய்யலாமா? போலீசார் பதிலளிக்க உத்தரவு
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீதான வழக்கை ரத்து செய்யலாமா? போலீசார் பதிலளிக்க உத்தரவு
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை எந்தவித நோட்டீஸும் கொடுக்காமல் போலீசார் கைது செய்துள்ளது சட்டவிரோதம் என அவரது வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார்.
Published : July 23, 2026 at 5:17 PM IST
சென்னை: முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்கண்டேயன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு மீது பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விளாத்திக்குளம் தொகுதியில் திமுகவை வெற்றி பெற செய்வதற்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் கடந்த 18ம் தேதி நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக தெரிகிறது. சட்டமன்றத்தை கூட்டிப் பார் என்றும், அப்படி கூட்டினால் முதலமைச்சரின் எலும்புகளை உடைப்போம் எனவும் அவர் பேசியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தவெக நிர்வாகி ஒருவர் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து எம்எல்ஏ மார்க்கண்டேயனை கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, மார்கண்டேயனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கோரி காவல்துறை தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேபோல, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி மார்கண்டேயன் தாக்கல் செய்த மனுவையும் தூத்துக்குடி நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், தன்னை சிறையில் அடைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரியும், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், "7 ஆண்டுகளுக்கு தண்டனை வழங்கும் பிரிவில் தன்னை கைது செய்வதற்கு முன் பி.என்.எஸ். பிரிவு 35(3)ன் படி உரிய நோட்டீஸை காவல்துறை வழங்கவில்லை. இவ்வாறு காவல்துறை சட்டவிரோதமாக தன்னை கைது செய்துள்ளதை நடுவர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல், சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. எனவே, தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என அதில் அவர் கோரியிருந்தார்.
இந்த மனுவானது, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மார்க்கண்டேயன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், "நோட்டீஸ் ஏதும் அனுப்பாமல் எம்எல்ஏ மார்க்கண்டேயனை நேரடியாக கைது செய்துள்ளனர். உச்சநீதிமன்ற விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதால், நீதிமன்ற காவலில் வைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என வாதிட்டார்.
இதையடுத்து, காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மார்க்கண்டேயனின் மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.