📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 23, 2026 04:34 AM

திமுக எம்எல்ஏ மார்கண்டேயன் ஜாமீன் மனு தள்ளுபடி; உயர் நீதிமன்றத்தை நாடும் திமுக?

திமுக எம்எல்ஏ மார்கண்டேயன் ஜாமீன் மனு தள்ளுபடி; உயர் நீதிமன்றத்தை நாடும் திமுக?

திமுக எம்எல்ஏ மார்கண்டேயன் ஜாமீன் மனு தள்ளுபடி; உயர் நீதிமன்றத்தை நாடும் திமுக?

'எத்தனை நாள் உள்ளே இருக்குமோ அவ்வளவு வேகத்தில் ஆட்சிக்கு வருகிறோம்' என திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் போலீஸ் வாகனத்தில் இருந்தவாறே தொண்டர்களிடம் தெரிவித்தார்.

Published : July 22, 2026 at 4:49 PM IST

தூத்துக்குடி: முதல்வரை விமர்சித்த வழக்கில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக முதல்வர் குறித்து சர்ச்சைகுரிய வகையில் பேசியதால் விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், மார்க்கண்டேயன் தரப்பு வழக்கறிஞர் காசிராஜன் மார்க்கண்டேயனை விடுவிக்க கோரி தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மேலும், குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணன் சார்பில் இந்த வழக்கில் மார்கண்டேயனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மார்க்கண்டேயனை பாளையங்கோட்டை சிறைச்சாலையில் இருந்து போலீசார் தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.

அப்போது, அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஸ்ரீதேவி வாதாடும் போது, "கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி மற்றும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஆகியோர் தூண்டுதலின் பேரில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ தமிழக முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினாரா? என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்துவதற்காக இரண்டு நாள் போலீஸ் காவல் வழங்க வேண்டும்" என தெரிவித்தார்.

காவலில் எடுக்க வேண்டும் எந்ற போலீசாரின் கோரிக்கையை மறுத்த நீதிபதி, மார்கண்டேயனின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நீதிமன்றத்திற்கு வெளியே வந்த மார்க்கண்டேயன் திமுக கட்சியினரிடையே பேசும் போது, "எத்தனை நாள் உள்ளே இருக்குமோ அவ்வளவு வேகத்தில் ஆட்சிக்கு வருகிறோம். அனைவரும் சந்தோஷமாக இருங்கள். நீதிமன்றத்தில் ரொம்ப சவுரியமாக இருக்கிறது. 25 புத்தகம் சிறைச்சாலையில் வைத்திருக்கின்றேன்" என்றார்.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கடந்த 18ஆம் தேதி இரவு நடைபெற்றது. அதில் உரையாற்றிய விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், தமிழக முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசினார்.

சட்டமன்றத்தில் முதல்வரின் எலும்பு உடைக்கப்படும் என மார்க்கண்டேயன் பேசிய நிலையில், இதுதொடர்பான புகாரின் பேரில் மார்கண்டேயனை தூத்துக்குடி போலீசார் கைது செய்தனர்.