📅 Saturday, 29 August 2026 IST | ஆவணி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 29, 2026 08:04 AM

திமுக

திமுக

சென்னை: கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், தி.மு.க.,வில் மாவட்ட செயலர்கள் எண்ணிக்கை, 77ல் இருந்து 110 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: கொள்கை, அமைப்பு முறை, செயல்பாடுகள், தொண்டர்கள் என்ற நான்கு அடிப்படைகளை கொண்டு தி.மு.க., இயங்கி வருகிறது. இந்த நான்கையும் காலங்கள் தோறும் புதுப்பித்தும், செழுமைப் படுத்தியும் வருகிறோம்.

தற்போதுள்ள கட்சியின் மாவட்டங்களின் எண்ணிக்கையை, 77-ல் இருந்து, 110- மாவட்டங்களாக பிரித்து அறிவிக்கிறேன். அதிக மக்கள் தொகை காரணமாக சோழிங்கநல்லுார் தொகுதி, தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த 110 மாவட்டங்களில், தற்போதைய மாவட்ட செயலர்கள், தலைமை நிலையம் அனுப்பி வைக்கும் பிரதிநிதி முன்னிலையில், மாவட்ட செயற்குழுவை கூட்ட வேண்டும். அதில், நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட, கிளை அமைப்புகளை பிரிப்பதற்கான பரிந்துரைகளை, 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் அதில் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் அறிவித்த, 110 மாவட்ட பட்டியலில், கன்னியாகுமரி முதல் சென்னை வரை 234 சட்டசபை தொகுதிகள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. உதாரணமாக, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர் கோவில் ஆகிய தொகுதிகள் உள்ளன. கன்னியாகுமரி தெற்கு மாவட்டத்தில் குளச்சல், கிள்ளியூர் ஆகிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

சென்னை மட்டும் 10 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. சென்னை தென்கிழக்கு மாவட்டத்தில் சைதாப்பேட்டை, மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய, மூன்று தொகுதிகள் உள்ளன. சென்னை தெற்கு மாவட்டத்தில் சோழிங்கநல்லுார் மட்டும் இடம் பெற்றுள்ளது.

கடந்த 2018 ஆக., 28ல், தி.மு.க., தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். கால மாற்றங்களுக்கு ஏற்ப, மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ, மண்ணில் நீடித்தி ருப்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும் என, பேசியிருந்தேன். கட்சி தலைவராக ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில், அப்படி ஒரு மாற்றத்தை, மறு சீரமைப்பை அறிவித்துள்ளேன். கட்சி நலனை முன்னிறுத்தி செய்யப்படும், இந்த மறு சீரமைப்புக்கு, அனைவரும் துணை நிற்க வேண்டும். உங்கள் துணையோ டு, தி.மு.க.,வை வெற்றிக்கு அழைத்து செல்வேன். - ஸ்டாலின் தலைவர், தி.மு.க.,

தி.மு.க.,வில், மாவட்டங்கள் எண்ணிக்கை 110 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதால், 33 புதிய மாவட்ட செயலர்கள் தேர்வாக உள்ளனர். இளைஞரணி நிர்வாகிகள் 33 பேரை, மாவட்ட பொறுப்பாளராக நியமிக்குமாறு, ஸ்டாலினிடம், தி.மு.க., இளைஞரணி செயலரான உதயநிதி வலியுறுத்தியுள்ளார். ஆனால், தேர்தல் நடத்தி, மாவட்ட செயலர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதில், துணை பொதுச்செயலர் கனிமொழி உறுதியாக இருக்கிறார். இந்நிலையில், 'உட்கட்சி தேர்தல் வாயிலாகவே, மா. செ.,க்கள் தேர்வு' என, ஸ்டாலின் அறிவித்து உள்ளார். தி.மு.க.,வில் மாவட்ட செயலர் தேர்தல் என்பது, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, தி.மு.க.,வில் இருந்த காலத்தில் நடத்தப்பட்டது. அதன்பின், தேர்தல் நடத்தாமல், பேச்சு நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். தற்போது, சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், தி.மு.க.,வை பலப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால், மாவட்ட செயலர்கள் பதவிக்கு தேர்தல் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க.,வில், முன்னாள் அமைச்சர்கள் சேகர்பாபு, சுப்பிரமணியம் போன்றவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த மாவட்டங்களில் தொகுதி களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது. ஸ்டாலின் போட்டியிட்டு தோல்வியடைந்த, சென்னை கொளத்துார் தொகுதி, சேகர்பாபு பொறுப்பில் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. இதுபோல, சுப்பிரமணியத்திடமிருந்து, அவர் போட்டியிட்டு தோற்ற சென்னை சைதாப்பேட்டை தொகுதி பறிக்கப்பட்டுள்ளது. இதனால், அவருக்கு மாவட்ட செயலர் பதவி இல்லை என தெரிகிறது. மேலும், மாவட்ட செயலர் சிற்றரசுவிடம் இருந்த அண்ணாநகர் தொகுதி பறிக்கப்பட்டு, அவருக்கும் 'செக்' வைக்கப்பட்டுள்ளது.