'தினமலர்' நாளிதழுக்கு தமிழக காங்., தலைவர் நன்றி
சென்னை: லஞ்சம் வாங்கிய த.வெ.க., நிர்வாகி கைதான செய்தியை, நம் நாளிதழ் மற்றும் இணையதளத்தில் 'லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்' என்ற தலைப்பில் வெளியிட்டதற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் நன்றி தெரிவித்துள்ளார்.
நம் நாளிதழில், 'இன்று லஞ்சத்தில் மாட்டியவர்கள்' என்ற தலைப்பில், லஞ்சம் வாங்கியதால், கைது செய்யப்படுவோர் பற்றிய செய்தி வெளியிடப்படுகிறது. இந்நிலையில், 'யாரேனும் லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் புகார் அளிக்கலாம்' என, முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, லஞ்சம் கேட்போர் குறித்து, புகார் அளிக்க, 'வாட்ஸாப்' எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை, தமிழக அரசு வெளியிட்டது. இதன் விபரம், நேற்று நம் நாளிதழில் வெளியானது. அரசு அறிவித்த எண்ணை, பொதுமக்கள் அறியவும், அரசு அலுவலகங்களில் ஒட்டி வைக்கவும் வசதியாக, விளம்பரமாகவும் வெளியிடப்பட்டது.
இதற்கிடையே, தி.மு.க.,வில் இருந்து த.வெ.க.,வில் இணைந்தவரான, செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் ஊராட்சி தலைவர் வீராசாமி, ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கியதற்காக நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். இந்த செய்தி, 'தினமலர்' இணையதளத்தில், 'லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்' என்ற தலைப்புடன் வெளியானது.
இதற்காக, நன்றி தெரிவித்து, மாணிக்கம் தாகூர் வெளியிட்ட அறிக்கையில், 'காமராஜர் பிறந்த நாளில், காங்கிரஸ் அறிவித்த, 'லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்' முழக்கத்தின் தீவிரத்தை, செய்தி வாயிலாக மெய்ப்பித்த, 'தினமலர்' நாளிதழ் மற்றும் இணையதளத்திற்கு நன்றிகள். கொள்கை முழக்கங்கள், காலத்தின் தேவை என்பதை உரக்க சொல்வோம்' என கூறியுள்ளார்.