📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 16, 2026 11:33 AM

திராவிடக் கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சி: திருமா

திராவிடக் கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சி: திருமா

சென்னை: தமிழகத்தில் இருதுருவ அரசியலை நிலைநாட்ட வேண்டும் எனும் முனைப்பு தவெகவுக்கு உள்ளதாக விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் திராவிடக் கட்சிகளை ஒரே நேரத்தில் பலவீனப்படுத்த வேண்டும் என்றும் அதிமுகவை முற்றாக அழித்தொழிக்க வேண்டும் என்றும் பாஜக உள்ளிட்ட சில தரப்பினர் செயல்பட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுகவைக் குறிவைத்துதான் புது இயக்கத்தைத் தொடங்கியுள்ள அண்ணாமலையும் காய் நகர்த்தியதாக அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது திருமாவளவன் குறிப்பிட்டார்.

“முதலில் அதிமுகவைக் குறிவைத்துப் பலவீனப்படுத்துவது, அதன் பின்னர் திமுகவைத் தனிமைப்படுத்தி பலவீனப்படுத்துவது எனச் சூது அரசியல், சூழ்ச்சி நிறைந்த அரசியலை ஒருதரப்பினர் அரங்கேற்றிக் கொண்டுடிருப்பதாக நான் கருதுகிறேன்,” என்றார் திருமாவளவன்.

இந்த சூழ்ச்சி அரசியலில் தவெகவும் இணைந்துள்ளதா என்பது குறித்து அக்கட்சியிடம்தான் கேட்கவேண்டும் என்றும் தவெக கூட்டணியில் பாமக இணையுமா என்ற ஆரூட அடிப்படையிலான கேள்விக்கு தம்மால் பதிலளிக்க இயலாது என்றும் அவர் கூறினார்.

“தமிழ்நாட்டில் மாறி மாறி எம்எல்ஏக்கள் விலை பேசப்படுகிறார்கள் அல்லது விலைக்கு வாங்கப்படுகிறார்கள் எனும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல என்பதை விசிக தொடக்கத்திலிருந்து சுட்டிக்காட்டி வருகிறது,” என திருமாவளவன் தெரிவித்தார்.

இத்தகைய போக்கு ஜனநாயகத்திற்கு தீங்கிழைப்பதாக உள்ளது என்றார் அவர்.