📅 Thursday, 30 July 2026 IST | ஆடி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 30, 2026 06:32 PM

திராவிடர் கழக பேரணிக்கு அனுமதி மறுப்பதா? கலி பூங்குன்றன் ஆவேசம்

திராவிடர் கழக பேரணிக்கு அனுமதி மறுப்பதா? கலி பூங்குன்றன் ஆவேசம்

திராவிடர் கழக பேரணிக்கு அனுமதி மறுப்பதா? கலி பூங்குன்றன் ஆவேசம்

எங்கள் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டதை சட்டரீதியாக அணுகுவோம். இதனையும் மீறி தடை விதிக்கப்பட்டால் மிகப்பெரிய பேரணியை நடத்துவோம் என கலி பூங்குன்றன் தெரிவித்தார்.

Published : July 30, 2026 at 5:55 PM IST

சென்னை: பெரியாரை கொள்கை தலைவராக அறிவித்துள்ள தவெக அரசு, திராவிடர் கழக பேரணிக்கு அனுமதி மறுத்தது ஏன்? என அதன் துணைத்தலைவர் கலி பூங்குன்றன் கேள்வியெழுப்பியுள்ளார்.

நீட் தேர்வையும், EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பாக இன்று சென்னை வேப்பேரியில், இருசக்கர வாகன பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இருந்து இருசக்கர வாகன பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் இப்பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பெரியார் திடலில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்த பேரணியை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக திராவிடர் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. பின்னர், அதன் துணைத்தலைவர் கலி பூங்குன்றன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறுகையில், "இருசக்கர வாகனப் பேரணி எங்கெல்லாம் நடத்தப்படுகிறதோ அங்கே பேரணி நடத்த முறையாக காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், இன்று கடைசி நேரத்தில் பேரணிக்கு அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 18ஆம் தேதியே இதற்காக நாங்கள் அனுமதி கேட்டு மனு அளித்தோம். இந்நிலையில், 8 நாட்களுக்கு பிறகு, அதுவும் பேரணி நடைபெறும் நாளன்று அனுமதி இல்லை என்று கூறுவது சட்ட ரீதியாக தவறு.

திராவிட கழகம் இது போன்ற பரப்புரைகளை மேற்கொண்டிருக்கிறது. திராவிட கழகம் எந்த போராட்டங்களை, பேரணிகளை நடத்தினாலும் எந்தவித அசம்பாவிதமும் நேரிடாது. அமைதியான வழியில் நாங்கள் போராட்டத்தை நடத்துவோம். அப்படியிருக்கும் போது, எங்கள் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பது அதிர்ச்சியாக உள்ளது.

என்ன காரணத்திற்காக பேரணிக்கு தடை விதிக்கப்பட்டது என்ற விளக்கம் காவல்துறை அளிக்கவில்லை. இதனை சட்டரீதியாக அணுகுவோம். இதனையும் மீறி தடை விதிக்கப்பட்டால் நிச்சயமாக மிகப்பெரிய அளவில் பேரணியை நடத்துவோம்" என கலி பூங்குன்றன் தெரிவித்தார்.