* திறந்தவெளி சாக்கடைகளில் மனிதக்கழிவு * சுத்தமில்லா சுகாதாரம் : செப்டிக் டேங்க் வசதியின்றி தொற்றுநோய்
கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான ஊராட்சி பகுதிகளில் செப்டிக் டேங்க் கட்டமைப்பின்றி திறந்தவெளி சாக்கடைகளில் மனிதக்கழிவுகள் விடப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 306 ஊராட்சிகள்,1 மாநகராட்சி, 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள் உள்ளன. நகர், ஊரக பகுதிகளில் கட்டமைப்பு ஏற்படுத்தும் போது கழிப்பறைகளுக்கு செப்டிக் டேங்க் வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற நெறிமுறை உள்ளது.இவை பெயரளவிற்கு செயல்படுத்தப்படும் நிலையில் எஞ்சிய பகுதிகளில் நேரடியாக திறந்தவெளி சாக்கடையில் மனிதக்கழிவுகள் விடும் போக்கு உள்ளது.
இதனை நகர், ஊரக உள்ளாட்சி அமைப்பை சேர்ந்த அலுவலர்கள் கண்டு கொள்வதில்லை. குறிப்பாக கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள ஊராட்சிகளில் இத்தகைய போக்கு அதிகரித்து உள்ளது.
திறந்தவெளி சாக்கடையில் விடப்படும் மனிதக்கழிவுகளால் நோய்த்தொற்று ஏற்படுகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளாட்சி அமைப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகர், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கழிப்பறைகளுக்கு செப்டிக் டேங்க் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். திறந்தவெளி சாக்கடையில் மனிதக்கழிவுகள் விடப்படும் நிலையில் அபராதம் விதிக்க வேண்டும். இதற்கு முன்கூட்டியே பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அவசியம். இதோடு அனைத்து வீடுகளிலும் செப்டிக் டேங்க் ஏற்படுத்த வலியுறுத்த வேண்டும். இதன் மூலம் நோய் தொற்றை தவிர்க்கலாம்.
- தனமுருகன், இயற்கை ஆர்வலர்,கொடைக்கானல் .