📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 07, 2026 06:34 PM

திருத்தணியில் ஆடிக் கிருத்திகை கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து சுவாமி தரிசனம்

திருத்தணியில் ஆடிக் கிருத்திகை கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து சுவாமி தரிசனம்

திருத்தணி முருகன் கோயிலில் நேற்று நடைபெற்ற ஆடிக்கிருத்திகை திருவிழாவின்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல வகையான காவடிகளுடன் கோயிலில் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் அதிக நேரங்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர் முருகப் பெருமானின் 5-ம் படைவீடான திருத்தணியில் ஆடிக் கிருத்திகை திருவிழா கடந்த 4-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் ஆடிப் பரணி விழா நடைபெற்றது.

நேற்று ஆடிக் கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத் திருவிழா நடைபெற்றது. ஆடிக் கிருத்திகையை ஒட்டி மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு நேற்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து, தங்கக் கிரீடம், தங்க வேல், பச்சை மாணிக்க மரகதக் கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. காவடி மண்டபத்தில் உள்ள உற்சவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

காலை 11 மணியளவில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து, திருப்பதி வெங்கடாசலபதி கோயில் நிர்வாக அதிகாரிகள், கோயில் தலைமை குருக்கள் ஆடிக் கிருத்திகையை ஒட்டி, சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பட்டு வஸ்திரம் கொண்டு வந்தனர்.

சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் முருகன்.

அவர்களை திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் தரன், இணை ஆணையர் ரமணி ஆகியோர் வரவேற்றனர். பிறகு அந்த பட்டு வஸ்திரம் மூலவர் சுப்பிரமணிய சுவாமி, உற்சவர் சண்முகருக்கு அணிவிக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத் தணியில் குவிந்து, கோயில் மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை, மேல் திருத்தணி- நல்லாங்குளம் ஆகியவற்றில் புனிதநீராடி, பால், பன்னீர், மலர், மயில், அலகு உள்ளிட்ட பல்வேறு வகையான காவடிகளுடன் படிக்கட்டுகள் மற்றும் மலைப்பாதை வழியாக கோயிலுக்குச் சென்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

பல பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில், மொட்டை அடித்து, காவடிகளை சுமந்தும், பம்பை, உடுக்கையை இசைக்கச் செய்தும், சிலம்பாட்டம் ஆடியும், பக்திப் பாடல்களை பாடியவாறும் கோயிலுக்குச் சென்று சுவாமியை வணங்கினர்.

தெப்பத்தில் 3 முறை வலம்

ஆடிக் கிருத்திகை திருவிழாவின் முக்கிய திருவிழாவான 3 நாள் தெப்பத் திருவிழாவின் முதல் நாள் தெப்பத் திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. மலைக்கோயில் காவடி மண்டபத்திலிருந்து உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானை சமேதராய் தேர் வீதியில் வலம் வந்து, மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கையில், மின் விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளினார்.

தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு, தெப்பத் திருவிழா தொடங்கியது. தெப்பத்தில் உற்சவர் முருகப் பெருமான் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தி இன்னிசை கச்சேரியுடன் நடைபெற்ற இந்த தெப்பத் திருவிழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருத்தணி நகரம் முழுவதும் 2,300-க்கும் மேற்பட்ட போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களிலிருந்து 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையிலிருந்து அரக்கோணம் வரை செல்லும் 3 மின்சார ரயில்கள், திருத்தணி வரை நீடிக்கப்பட்டன.

திருத்தணி நகர் முழுவதும் பக்தர்களுக்கு, வியாபாரிகள், பொதுமக்கள், பல்வேறு பொதுநல அமைப்புகள் சார்பில் அன்னதானம் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டன. மேலும் மருத்துவ வசதிகள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டன.