📅 Saturday, 26 September 2026 IST | புரட்டாசி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology September 26, 2026 01:03 AM

திருவள்ளூரில் ருசிகரம்: வீட்டுக்குள் புகுந்து வியாபாரியிடம் செல்போனை பறித்துச்சென்ற குரங்கு

திருவள்ளூரில் ருசிகரம்: வீட்டுக்குள் புகுந்து வியாபாரியிடம் செல்போனை பறித்துச்சென்ற குரங்கு

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே வீட்டுக்குள் புகுந்த குரங்கு வியாபாரியிடம் செல்போனை பறித்துச் சென்றது. 2 மணி நேரம் போராடி வாழைப்பழத்தை கொடுத்து திரும்பப் பெற்றார்.

வியாபாரியிடம் செல்போனை பறித்த குரங்கு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பஜார் பகுதியை சேர்ந்தவர் பிரதிஷ்துரை (வயது 38). அதே பகுதியில் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை அவர் தனது வீட்டில் கட்டிலில் படுத்து கொண்டு செல்போன் பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென உள்ளே புகுந்த குரங்கு செல்போனை பறித்துச் சென்றது.

குரங்கை விரட்டி சென்ற வியாபாரி

இதனால் பதறிப்போன பிரதீஷ்துரை குரங்கை விரட்டி சென்றார். வேகமாக ஓடி மரத்தில் ஏறிய குரங்கு அருகில் உள்ள வீட்டு மாடியில் தாவியது. மாடியில் இருந்து விரட்டியபோது, செல்போன் கவரை கழற்றி வீசியது. அருகிலுள்ள 2 வீடுகளை தாண்டி 3-வது மாடிக்கு சென்றது. குரங்கு கையில் வைத்திருந்த செல்போனுக்கு போன் செய்தபோது ரிங்டோன் சத்தம் கேட்டதும் செல்போனை கடித்தது. இதை வேடிக்கை பார்க்க கூட்டம் கூடியது. செல்போனை எப்படி குரங்கிடம் இருந்து வாங்குவது என்று தெரியாமல் பிரதீஷ்துரை தவித்தார்.

வாழைப்பழத்தை கொடுத்து செல்போனை திரும்ப பெற்றார்

2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு பிரதீஷ்துரை குரங்கை நோக்கி வாழைப்பழத்தை வீசினார். குரங்கும் தன்னிடம் இருந்த செல்போனை கீழே வீசிவிட்டு வாழைப்பழத்தை எடுத்து சென்றது. இதனால் பெருமூச்சு விட்ட வியாபாரி பிரதீஷ்துரை செல்போனை எடுத்து பார்த்தார். குரங்கு கடித்ததில் செல்போன் டிஸ்ப்ளே உடைந்திருந்தது.

குரங்கை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

பொன்னேரி பகுதியில் கடந்த சில மதங்களாக குரங்குகள் கூட்டம் கூட்டமாக வருகின்றன. கடைகள், வீடுகளில் புகுந்து பொருட்கள் தின்பண்டங்களை எடுத்து செல்கின்றன. குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.