📅 Wednesday, 30 September 2026 IST | புரட்டாசி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 30, 2026 05:02 AM

தலைமை தேர்தல் கமிஷனர் மீதான மனுவை விசாரிக்க ஒப்புதல்! உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை

தலைமை தேர்தல் கமிஷனர் மீதான மனுவை விசாரிக்க ஒப்புதல்! உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை

- சிறப்பு நிருபர் -

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை, 'சஸ்பெண்ட்' செய்யக் கோரியும், தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோரின் ஒப்புதல் இல்லாமல் எடுக்கப்பட்ட முடிவுகளை எதிர்த்தும் தொடரப்பட்ட பொதுநல மனுவை, அடுத்த வாரம் விசாரிக்க உச்ச நீதிமன்றம், நேற்று ஒப்புதல் தெரிவித்தது.

எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உட்பட பல்வேறு விவகாரங்களில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரின் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் கேபினட் செயலருக்கு கடிதம் எழுதியதாக, சமீபத்தில் தகவல் வெளியானது.

குறிப்பாக, படிவம் -- 6 ல், எஸ்.ஐ.ஆர்., தொடர்பான சில தகவல்களை சேர்த்தது விதிமுறைகளுக்கு எதிரானது என, அவர்கள் ஆட்சேபம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 'அனைத்து முடிவுகளும் ஒருமனதாக எடுக்கப்பட்டவை' என, தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில், பீஹாரின் பாட்னாவைச் சேர்ந்த ராகேஷ் குமார் சிங் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு: அரசியலமைப்பு சட்டப்பிரிவு - 342-ன் படி, பல உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் கமிஷனில், முடிவுகள் அனைத்தும் ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை அடிப்படையிலோ தான் எடுக்கப்பட வேண்டும். ஆனால், தற்போது தேர்தல் கமிஷன் செயல்படும் விதத்தை பார்க்கும்போது, முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்படுகின்றனவா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை முடியும் வரை, தலைமை தேர்தல் கமிஷனர் என்ற முறையில் ஞானேஷ் குமார் தன் அதிகாரங்களை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும். அவரை அப்பொறுப்பில் இருந்து சஸ் பெண்ட் செய்ய வேண்டும்.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு - 324(1)-ன் கீழ், தேர்தலை நடத்தும் மற்றும் கட்டுப்படுத்தும் அதிகாரம் தலைமை தேர்தல் கமிஷனருக்கு மட்டும் வழங்கப்படவில்லை; மாறாக, அது தேர்தல் கமிஷன் கூட்டு அமைப்புக்கே வழங்கப்பட்டுள்ளது.

எனவே, தனிநபராக ஞானேஷ் குமார் சட்டவிரோதமாக அதிகாரங்களை பயன்படுத்தினாரா என்பதை நீதிமன்றம் ஆய்வு செய்து, அத்தகைய நடவ டிக்கைகளை செல்லாதவை என அறிவிக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில், தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோரின் ஒருமித்த கருத்துகளின் அடிப்படையில் தேர்தல் கமிஷனின் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.

இந்த நடைமுறையால் ஏற்படும் காலி பணியிடத்திற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய குழுவின் பரிந்துரையின்படி, புதிய நியமனம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு தொடர்பாக, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று முறையிட்ட மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், மனுவை அவ சரமாக விசாரிக்க கோரினார். இதை ஏற்ற அமர்வு, மனுவை அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிட ஒப்புதல் அளித்தது.

மஹாராஷ்டிர தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.சொக்கலிங்கம், கடந்த 24ல், தேர்தல் கமிஷனுக்கு எழுதிய கடிதத்தில், 'வாக்காளர் பட்டியலில் ஏற்படும் முரண்பாடுகள் தொடர்பாக, இ.ஆர்.ஓ., எனப்படும், வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கு கூடுதல் முடிவெடுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும்' என, வலியுறுத்தினார்.

அதன் விபரம்: வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடுகள் தொடர்பாக, 'இ.சி.ஐ., நெட்' மென்பொருள் மூலம் அனுப்பப்படும் நோட்டீஸ்கள் மீது, இ.ஆர்.ஓ.,க்கள் முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும். வாக்காளரின் பெற்றோர் பெயர் அல்லது வயது விபரங்களில் ஏற்படும் முரண்பாடுகள் போன்றவற்றை, இ.ஆர்.ஓ.,க்கள் தங்களின் சட்ட அதிகாரத்தை பயன்படுத்தி முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும்.

வாக்காளர் சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் திருப்திகரமாக இருப்பதாக இ.ஆர்.ஓ., கருதினால், அந்த வாக்காளரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அழைப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தற்போது இ.சி.ஐ., நெட் மென்பொருள் டில்லி தலைமை அலுவலகத்தால் மையப்படுத்தப்பட்டு இயக்கப்படுவதால், வாக்காளருக்கு நோட்டீஸ் அங்கிருந்தே அனுப்பப்படுகிறது. அது தொடர்பாக, உள்ளூர் அளவில் இ.ஆர்.ஓ., முடிவெடுக்க வசதியாக மென்பொருளில் மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கோரிக்கைகளை தேர்தல் கமிஷன் ஏற்றதாக கூறப்படுகிறது.