📅 Wednesday, 18 November 2026 IST | கார்த்திகை 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema June 24, 2026 10:01 AM

தமிழ் சினிமா படப்பிடிப்புகளில் தொடரும் விபத்துகள்: பாதுகாப்பு இல்லாமல் பரிதவிக்கும் துணை நடிகர்கள்

தமிழ் சினிமா படப்பிடிப்புகளில் தொடரும் விபத்துகள்: பாதுகாப்பு இல்லாமல் பரிதவிக்கும் துணை நடிகர்கள்

மதுரை: தமிழ் திரைப்படத் துறையில் படப்பிடிப்புகளின்போது, ஏற்படும் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், துணை நடிகர்கள், ஸ்டன்ட் கலைஞர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

சமீபத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும், 'கில்லர்' படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்ததில், தொழிலாளி ஒருவர் பலியானார். 2020ல் இயக்குனர் ஷங்கரின் 'இந்தியன் 2' படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழுந்து மூவர் உயிரிழந்தனர். 2022ல் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தில் ரயில் செல்வது போன்ற காட்சிகளை படமாக்கியபோது, 15 அடி உயரத்தில் இருந்து ஸ்டன்ட் கலைஞர் சுரேஷ் தவறி விழுந்து பலியானார். 'அறம்' பட இயக்குனர் கோபி நயினார் 2023ல் இயக்கிய 'அகரம் காலனி' திரைப்பட படப்பிடிப்பில், லைட்மேன் சண்முகம் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

கடந்தாண்டு இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய 'வேட்டுவம்' திரைப்பட படப்பிடிப்பில் ஸ்டன்ட் கலைஞர் மோகன்ராஜ் காரில் இருந்து குதிக்கும் காட்சியில் தவறிவிழுந்து உயிரிழந்தார். இது போல் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு படப்பிடிப்பு தளங்களில் நிகழ்ந்த விபத்துகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

துணை நடிகர்கள் கூறியதாவது: பெரும்பாலான படப்பிடிப்பு தளங்களில் முதலுதவி போன்ற அடிப்படை வசதிகள் கூட இருப்பதில்லை. ஸ்டுடியோவில் 20 அடி உயரத்தில் தான் லைட்டுகள் கட்டப்பட்டிருக்கும். அதிக பவர் கொண்ட மின்விளக்குகள் அருகில் நின்றுகொண்டுதான் லைட்மேன்கள் வேலை செய்வார்கள். இதுபோன்ற சூழலில் படப்பிடிப்பில் பெரிய விபத்துக்கள் நடந்தால் மட்டுமே மருத்துவமனைகளுக்கு அழைத்துச்செல்வர். தினக்கூலி அடிப்படையில் பணிபுரிவதால், விபத்து ஏற்பட்டால் மருத்துவ செலவு, வருமான இழப்பை தாங்களே சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது.

ஹாலிவுட்டில் ஸ்டன்ட் கலைஞர்களுக்கு பல நாட்கள் ஒத்திகை நடத்தப்படும். அவசர நிலையில் மருத்துவக் குழு, அவசர உதவிக்கான பிரத்யேக குழு தயார் நிலையில் இருக்கும். அங்கு பாதுகாப்பு தரநிலைகள் பூர்த்தி ஆகாவிட்டால், காட்சிகளை படமாக்க முடியாது. இந்தியாவில் ஸ்டன்ட் கலைஞர்களுக்கான தனிப்பட்ட சட்டம் இல்லை. பாதுகாப்பு, இழப்பீட்டு விவகாரங்கள் பெரும்பாலும் சங்கங்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் உடன்பாடுகளின் அடிப்படையில் தீர்க்கப்படுகின்றன. பல நேரங்களில் செலவைக் குறைக்க பாதுகாப்பு உபகரணங்களை குறைக்கின்றனர். இதனால் பல அப்பாவி உயிர்கள் பலியாகின்றன என்றனர்.

திரையுலக பின்னணி கொண்ட முதல்வர் விஜய், திரைப்பட கலைஞர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரைப்பட கலைஞர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.