தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சி தலைவர் கொலை வழக்கு; குற்றஞ்சாட்டப்பட்ட 11 பேரும் விடுதலை
தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சி தலைவர் கொலை வழக்கு; குற்றஞ்சாட்டப்பட்ட 11 பேரும் விடுதலை
அரசு தரப்பு குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதால், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர்.
Published : August 20, 2026 at 10:55 PM IST
சென்னை: தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் அக்பர் அலி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 11 பேரை விடுதலை செய்து சென்னை நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அக்பர் அலி. தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்தார். இவருக்கும், ராயப்பேட்டையை சேர்ந்த இம்ரான், ஐஸ் ஹவுஸ் சான் பாஷா உள்ளிட்டோர் இடையே, ஏற்கனவே கட்சி சார்ந்த பிரச்சனையில் முன் விரோதம் இருந்துவந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி, ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள மசூதிக்கு, அதிகாலை அக்பர் அலி தொழுகைக்கு சென்ற போது, அங்கு வந்த கும்பல் அக்பர் அலியை, அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து, அவரது தம்பி கவுஸ் பாஷா அளித்த புகாரின் அடிப்படையில், ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர், கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இம்ரான், தஸ்து, அப்துல் கரீம் உட்பட 12 பேரை கைது செய்தனர்.
வழக்கு விசாரணையின் போது, குற்றம்சாட்டப்பட்ட பாபு என்பவர் உயிரிழந்ததால், அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது. மீதமுள்ள 11 பேர் மீதான வழக்கு விசாரணை, சென்னை நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.கே.பி.தமிழரசி, "வழக்கில் அரசு தரப்பில் 24 சாட்சிகளில், கொலையான அக்பரின் தம்பி உட்பட பலர் பிறழ் சாட்சியாக மாறி உள்ளனர். புலன் விசாரணை அதிகாரி மற்றும் மருத்துவர் அளித்த சாட்சியங்களை மட்டும் வைத்து, கொலை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர் என்பதை உறுதியாக கூற முடியாது.
மேலும், அரசு தரப்பு குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதால், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர்" என தீர்ப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.