📅 Sunday, 11 October 2026 IST | புரட்டாசி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 11, 2026 10:00 AM

தமிழ் மொழி, கலாசாரத்தின் மீது பா.ஜ., தாக்குதல்: தமிழகத்தை தொட விடமாட்டோம் என ராகுல் பேச்சு

தமிழ் மொழி, கலாசாரத்தின் மீது பா.ஜ., தாக்குதல்: தமிழகத்தை தொட விடமாட்டோம் என ராகுல் பேச்சு

சென்னை: ''தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தின் மீது மத்திய பா.ஜ., அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது. அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தமிழகத்தை பா.ஜ., தொட, நாங்கள் விடமாட்டோம்,'' என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறினார்.

சென்னை தீவு திடலில், அகில இந்திய காங்கிரஸ் சார்பில், 'மாணவர்களின் குரல்' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், மாணவர்கள் மத்தியில் ராகுல் பேசியதாவது:

ஒவ்வொரு முறையும் நான் தமிழகம் வரும் போதெல்லாம், இந்த மக்களிடம் இருந்து ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொள்கிறேன். தமிழகத்தின் இரு பெரும் ஆளுமைகளாக திருவள்ளுவரும், ஈ.வெ.ரா.,வும் திகழ்கின்றனர். மாணவர்களுக்காக அவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் எப்போதும் எதையும் குருட்டுத் தனமாக ஏற்றுக்கொள்ளாமல், பகுத்தறிந்து கேள்வி கேட்க கூடியவர்களாகவும், தங்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்ப கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கை வழியாக, தமிழகத்தில் ஹிந்தி மொழியை திணிக்க, மத்திய அரசு முயற்சிக்கிறது. தமிழ் மொழி, கலாசாரம், வரலாறு போன்றவற்றின் மீது, பா.ஜ., தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது. 'தமிழ் கலாசாரம், மொழி போன்றவை இரண்டாவது பட்சமானது' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்கிறார்.

தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதால், தமிழகத்துக்கான 3,300 கோடி ரூபாய் கல்வி நிதியை, மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வால், தமிழ் வழி கல்வி பயின்ற மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பு கிடைக்க முடியாத நிலை உள்ளது.

தமிழகத்தில், 70 சதவீதத்துக்கும் அதிகமான பல்கலைகளில், துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை சேர்ந்தவர்களை பல்கலை துணைவேந்தராக நியமிக்க, கவர்னர் முயற்சிக்கிறார். அதேபோல, லோக்சபா தொகுதி மறுவரையறை சட்ட மசோதாவை கொண்டு வந்து, தமிழகத்தின் குரலை நெரிக்க பார்க்கின்றனர்.

தமிழ் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் தமிழ் மொழியின் மீதான மோடியின் தாக்குதலை அனுமதிக்க மாட்டோம்; தமிழகத்தை தொடவும் விடமாட்டோம். ஓட்டு திருட்டு வழியாக, பிரதமர் மோடி ஜனநாயகத்தை சீர்குலைக்கிறார். அதற்கு எதிராக போராடுபவர்கள் மீது, வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது.

புதுடில்லியில் போராடும் மாணவர்களின் குரலை, மத்திய அரசு ஒடுக்குகிறது. அங்கு இணைய வசதிகள் முடக்கப்பட்டுள்ளன. நாட்டின் ஜனநாயகத்தை யாராலும் அழிக்க முடியாது. 15 ஆண்டுகளாக, மோடி நடத்தி வரும் நாடகம் முடிக்கு வரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

'நீட்' தேர்வுக்கு எதிராக கையெழுத்து

காங்கிரஸ் சார்பில், சென்னையில் நடந்த மாணவர்களின் குரல் நிகழ்ச்சியில், 'நீட்' தேர்வுக்கு எதிராக தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் சகோதாரர் மணிரத்னம் பங்கேற்றார். அவர், நீட் தேர்வுக்கு தடை விதிக்க கோரும் இயக்கத்தில் கையெழுத்திடுமாறு, ராகுலிடம் கேட்டார். அதை ஏற்று, அந்த இயக்கத்தில் அவர் கையெழுத்திட்டார்.

'மக்கள் உரிமைகளை அதிகாரத்தால் பறிக்க முடியாது'

மாணவர்களின் கேள்விகளுக்கு ராகுல் அளித்த பதில்:

யார் சென்னாலும், உன் புத்திக்கு பொருந்தாததை செய்யாதே, பகுத்தறிந்து முடிவு செய் என, சொன்னவர் ஈ.வெ.ரா.,

ஈ.வெ.ரா., இருந்திருந்தால், மோடிக்கு என்ன சொல்லி இருப்பார்?

உலகத்தில் உயர்ந்த கொள்கையாக, மதம், மொழி, ஜாதி நிச்சயமாக இருக்காது. மனிதம் தான் உயர்ந்த கொள்கை. அதனால், நீங்கள் கடைப்பிடிக்கும் மதத்தை, ஜாதியை, ஆணாதிக்க தனத்தை விட்டு விடுங்கள் என, தலையிலேயே குட்டு வைத்து சொல்லி இருப்பார்.

நான் வியாசர்பாடியில் இருந்து வருகிறேன். வடசென்னை என்றாலே, குறிப்பாக வியாசர்பாடி என்றாலே, அனைவரிடமும் எதிர்மறை எண்ணங்கள் தான் உள்ளன. நாங்கள் படித்தாலும், எந்த பதவியில் இருந்தாலும், எங்கள் மீது ஒரு முத்திரை வைக்கின்றனர்.

ஜாதி ரீதியாக பல சவால்களை சந்திக்கிறோம். அவற்றை எதிர்க்க, கல்வியை ஆயுதமாக கையில் எடுத்தோம். அதற்கு உத்வேகம் அளித்தவர் அம்பேத்கர். நாங்கள் நடத்தும் டியூசன் சென்டரில், 150 மாணவர்கள் படிக்கின்றனர். 6ம் வகுப்பு மாணவன் கூட, ஆர்.டி.ஐ., வழியாக மாநில அரசை கேள்வி கேட்கிறான். நீங்கள் வியாசர்பாடி பகுதிக்கு வர வேண்டும்; எங்களுடன் சாப்பிட வேண்டும்.

நிச்சயம், ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறேன்.

டில்லியில் நடக்கும் மாணவர்களின் போராட்டத்தை கண்டோம். ஜனநாயகம் என்பது மக்களுக்கான உரிமைகளை வழங்குகிறது. ஆனால், மத்திய அரசு ஏன் அதை மக்களுக்கு வழங்க மறுக்கிறது?

யாராலும் இந்த நாட்டின் ஒற்றுமையையும், மாணவர்களையும் ஒடுக்க முடியாது. ஒருவர் எவ்வளவு பணம், அதிகாரம் வைத்திருந்தாலும், மக்களின் உரிமைகளை பறிக்க முடியாது. பிரதமர் மோடி, பணபலமிக்கவர்களுக்கும், வெளிநாட்டு சக்திகளுக்கும் தான் சமரசம் கொள்கிறார். அதுதான் மோடியை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

எனவே, யாரும் பயப்பட வேண்டாம். நாங்கள் உங்களிடம் இருக்கிறோம். மத்திய அரசு ஜனநாயகத்தை ஒடுக்குகிறது. டில்லியில் போராடும் மாணவர்கள் தாங்கள் கேள்வி கேட்பதை நிறுத்த கூடாது. தங்களின் எதிர்காலத்தை பாதுகாக்க, மாணவர்கள் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு மாணவர்களுடன் ராகுல் கலந்துரையாடினார்.