தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன ‘தணிக்கை’ நிலவரம் | உள்குத்து உளவாளி
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் ரூ.108 கோடிக்கு முறைகேடு நடந்திருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. ஆனால், தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 388 பிளாக்குகளில் 186 பிளாக்குகளில் மட்டுமே தணிக்கை முடிந்துள்ளதாம்.
அதிலேயே இந்த அளவுக்கு முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நிலையில், மொத்த தணிக்கையும் முடிந்தால் முறைகேடு ‘லெவல்’ இன்னும் உயரும் என்கிறார்கள். பயனாளிகளுக்குச் சேரவேண்டிய நிதியை ஒருசில அதிகாரிகளும் ஊழியர்களும் சேர்ந்து கொண்டு கூட்டுக்கொள்ளை அடித்திருப்பதாகவும், செய்யாத செலவுகளுக்கு எல்லாம் போலி பில்களை சேர்த்து பணத்தைச் சுருட்டி இருப்பதாகவும் தணிக்கை அறிக்கை மிரட்டுகிறதாம்.
அதனால் எஞ்சிய பிளாக்குகளிலும் தணிக்கை பணிகளை முடிக்க ஆளும் தரப்பு அவசரம் காட்டும் நிலையில், அதை மட்டுப்படுத்தும் வேலைகளில் சில அதிகாரிகள் மும்முரமாக இருக்கிறார்களாம். கடந்த ஆட்சியில் முதன்மையானவருக்கு அடுத்த நிலையில் இருந்தவரின் அலுவலகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்த பெண் அதிகாரியானவர் தற்போது மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கிறாராம்.
இவர் நினைத்தால் தணிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த முடியும். ஆனால் ஏனோ தெரியவில்லை அதற்கான வேலைகளை ஆறப்போடுவதிலேயே அதிகாரிகள் குறியாய் இருப்பதாகச் சந்தேகம் கிளப்புகிறார்கள்.