📅 Monday, 14 September 2026 IST | ஆவணி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 30, 2026 03:30 PM

தமிழ் பாடத்தில் முதல் பி.எச்.டி பட்டம் பெற்ற பேராசிரியர் பி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரி...!

தமிழ் பாடத்தில் முதல் பி.எச்.டி பட்டம் பெற்ற பேராசிரியர் பி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரி...!

தமிழ் மொழிக்கும், சமஸ்கிருத மொழிக்கும் சிறந்த பங்களிப்பை அளித்து பல்வேறு தொண்டுகளை செய்தவர் பேராசிரியர் பி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரி. சிறு கிராமத்தில் பிறந்து தமிழ் மொழியில் பி.எச்.டி பட்டம் பெற்று பெருமை சேர்ந்த அவரது பிறந்த நாளில் அனைவரும் நினைவு கூர்வது அவசியம்.

திருச்சி மாவட்டம் பாலக்கிருஷ்ணம் பட்டியில் 1890ஆம் ஆண்டு ஜூலை 29 தேதியில் பிறந்தவர் பி.எஸ் சுப்ரமணிய சாஸ்திரி. இவர் தனது SSLC படிப்பை திருச்சியில் உள்ள நேஷனல் உயர்நிலைப் பள்ளியிலும், FA படிப்பை புனித ஜோசப் கல்லூரியிலும், BA கணிதப் படிப்பை SPG (பின்னர் பிஷப் ஹீபர்ஸ்) கல்லூரியிலும் முடித்தார். முதல் ஆசிரியர் பணியை திருவையாறில் உள்ள சென்ட்ரல் உயர்நிலைப் பள்ளியிலும், (தற்போது சீனிவாச ராவ் மேல்நிலைப் பள்ளி) மற்றும் திருச்சியில் உள்ள நேஷனல் உயர்நிலைப் பள்ளியிலும் கணித உதவியாளராகத் தொடங்கினார்.

இதைத் தவிர்த்து அவர் தமிழ் மொழியிலும், இலக்கியத்திலும் புலமை பெற்றிருந்தார். இவர் 1930ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தில் 'History of Grammatical Theories in Tamil and their relation to grammatical literature in Sanskrit' (தமிழில் இலக்கணக் கோட்பாடுகளின் வரலாறு மற்றும் சமஸ்கிருத இலக்கண இலக்கியத்துடனான அவற்றின் தொடர்பு) என்ற தலைப்பிலான முனைவர் பட்ட (Ph.D.) ஆய்வை 1930ம் ஆண்டு சமர்ப்பித்தார். அதோடு மட்டுமல்லாமல், 'தொல்காப்பியத்தை' ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முதல் நபரும், மகாபாஷ்யத்தை மொழிபெயர்த்த முதல் நபரும் இவரே.

தமிழ் மொழிக்கும் மட்டுமல்லாமல், வடமொழிக்கும் பல இலக்கியப்பணிகளை ஆற்றியவர். “சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி” உருவானதிலும் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. இவரது சிறந்த மொழி புலமையையும், மொழி இலக்கண அறிவையும், ஒப்பியல் ஆய்வுத் திறமையையும், கண்டு வியந்து இவரது பெயரான பி.சா. சுப்பிரமணியம் என்பதன் சுருக்கமாக, செல்லமாக “பிசாசு” என்றும் அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.

சென்னை பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட முதல் தமிழ் முனைவர் பட்டம் இவருடையதே. இவர் சமஸ்கிருதம், தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமல்லாமல், ஜெர்மன், பிரெஞ்சு, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளையும் அறிந்து வைத்திருந்தார்.

இவர் செய்த தொல்காப்பிய ஆய்வில் வடமொழியின் சார்பின் தாக்கம் அதிகம் என்ற கருத்துகளும் அக்காலத்தில் தமிழறிஞரிடையே இருந்தன. தொடர்ந்து “தொல்காப்பிய சொல்லதிகாரக் குறிப்பு” என்ற இவரது நூல் சென்னைப் பல்கலைக்கழக தமிழ் வித்துவான் பாடநூலாகத் தேர்வு செய்யப்பட்ட போது விவாதங்கள் வெடித்தன.

இவர் வித்யாரத்னா (பனாரஸ்), வித்யாநிதி (கேரளா), வித்யாபூஷணா (கர்நாடகா) என பல மொழிகளில் பல பட்டங்களை பெற்றார். ஆனால் தமிழக அரசு அவருக்கு எந்தவித பட்டத்தையோ விருதையோ வழங்கவில்லை.

மேலும் எளிமைக்குச் சான்றாகத் திகழ்ந்த பேராசிரியர் பி.எஸ் சுப்ரமணிய சாஸ்திரி ஓய்வு காலத்தில் திருவையாறில் ஒரு துப்புரவுத் தொழிலாளிக்குத் திருக்குறளைக் கற்றுக்கொடுத்தார்.