தமிழ் பேசி வியாபாரம் செய்யும் சீனச் சகோதரிகள்
சரளமாகத் தமிழ் பேசி வாடிக்கையாளர்களைக் கவரும் சீன இளம் பெண் ஒருவர் இணையத்திலும் நேரிலும் பெரிதும் வரவேற்பைப் பெற்றுவருகிறார்.
மலேசியாவின் பினாங்கில் பிரபலமான கோழிச் சோற்றுக் கடை நடத்திவரும் சீனக் குடும்பத்தைச் சேர்ந்த லைனெட் லீ, 25, வாடிக்கையாளர்களோடு சரளமாகத் தமிழில் உரையாடுவதைக் காண முடியும்.
தன் சகோதரிகள் இருவரோடு இணைந்து ‘215 பெங் ஹுவாட் சிக்கன் ரைஸ்’ உணவகத்தை முன்னெடுத்து நடத்தி வரும் இவர், சட்டத் துறையில் பட்டம் பெற்றவர்.
தற்போது சட்ட உதவியாளராகப் பணியாற்றி வரும் இவர், ஓய்வுநேரங்களில் சமூக ஊடகங்களில் ‘அல்ஃபாநெட்’ (@alphanette_) என்ற பெயரில் படைப்பாளராகத் தன் வாழ்க்கை நிகழ்வுகளைப் பதிவிட்டு வருகிறார்.
அவ்வகையில், உணவகத்திற்கு வரும் தமிழ் வாடிக்கையாளர்களிடம் இவர் தமிழில் உரையாடும் காணொளி இணையத்தில் பரவிப் பெரிதும் வரவேற்பைப் பெற்றது.
தமிழ் தவிர, மாண்டரின், ஹோக்கியன், ஆங்கிலம், மலாய் ஆகிய மொழிகளையும் நன்கு அறிந்தவர் இவர்.
1979ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் குடும்ப உணவகத்தை லைனெட்டின் பெற்றோர் தொடங்கினர்.
தற்போது மூத்த சகோதரிகள் செனித் லீ, 32, கிரைஸ் லீ, 28, இருவரும் பெற்றோரின் உணவகப் பொறுப்பை முழுமையாக ஏற்றுநடத்தி வரும் நிலையில், லைனெட் வார இறுதி நாள்களிலும் ஓய்வு நேரங்களிலும் அவர்களுக்கு உதவியாகப் பணியாற்றி வருகிறார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
சிறுவயதில் மலர்ந்த தமிழ்ப் பிணைப்பு
சிறுவயதில் மூன்று சகோதரிகளையும் சீராட்டி வளர்த்த தமிழரான குழந்தைப் பராமரிப்பாளரிடமிருந்தே மூவருக்கும் தமிழ் பேசும் திறன் இயல்பாய்க் கிட்டியது.
அவரை அன்போடு ‘அம்மா’ என்றழைத்துத் தழுவிக்கொண்ட இவர்கள் தமிழ் மொழியையும் இயல்பாகவே கற்றுக்கொண்டனர்.
இந்த அன்பின் பிணைப்பு மொழியோடு நின்றுவிடவில்லை; பராமரிப்பாளரின் பிள்ளைகளையும் தங்களது உடன்பிறந்த சகோதரர்களாகவே கருதி அனைவரும் ஒரே குடும்பமாக வளர்ந்ததை லைனெட் நினைவுகூர்ந்தார்.
“வீட்டில் சகோதரிகளுக்குள்ளும் நாங்கள் தமிழிலேயே உரையாடிக் கொள்வோம்,” என்று தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார் அவர்.
வாடிக்கையாளர்களைக் கவரும் தமிழ்ப் பேச்சு
“வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான மொழியில் உரையாடும்போது, அவர்கள் உணவகத்துடன் நெருங்கிய பிணைப்பை உணர்கிறார்கள்; குறிப்பாக முதியவர்கள் அதைப் பெரிதும் விரும்புகிறார்கள்,” என்கிறார் லைனெட்டின் சகோதரி செனித், 32.
நீண்டகாலமாகச் செயல்பட்டு வரும் இக்குடும்ப உணவகத்திற்குத் தலைமுறை தலைமுறையாகத் தமிழ் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.
“சிறுவயதில் எங்களைப் பார்த்தவர்கள், இன்று தங்களது பேரக்குழந்தைகளுடன் வந்து உண்டு மகிழ்வதைப் பார்க்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது,” என்றும் செனித் குறிப்பிட்டார்.
மொழி என்பது தகவல்தொடர்புக்கும் அப்பால், பிற கலாசாரங்களையும் மனிதர்களையும் மதிப்பதற்கான மிகச்சிறந்த வழி என்பது லைனெட்டின் ஆணித்தரமான நம்பிக்கை.