தமிழ் திரையுலகை அரை நூற்றாண்டு ஆண்ட 'இசையரசி' எஸ்.ஜானகி
தமிழ் திரையுலகை அரை நூற்றாண்டு ஆண்ட 'இசையரசி' எஸ்.ஜானகி
தமிழ் திரையுலகில் எஸ்.ஜானகி என்ற 'இசையரசி' உருவாக்கிய சிம்மாசனத்தை யாராலும் நெருங்க முடியாது.
Published : July 12, 2026 at 12:42 PM IST
-BY எஸ். சையத் இப்ராஹிம்
இசைக்கு மொழியில்லை என்பார்கள். ஆனால், அந்த இசைக்கே ஒரு தனி மொழி உண்டு என்றால், அது நிச்சயம் 'இசையரசி' எஸ்.ஜானகியின் குரலாகத்தான் இருக்க முடியும்.
ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்து, தமிழ் திரையுலகிற்குள் நுழைந்து, ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக ஒட்டுமொத்த தமிழ் நெஞ்சங்களையும் தன் குரல் வித்தையால் கட்டிப்போட்ட ஒரு மந்திரவாதி அவர்.
இசையமைப்பாளர்களுடன் கூட்டணி
எம்.எஸ்.விஸ்வநாதன், ஏ.எம்.ராஜா, கே.வி.மகாதேவன், இளையராஜா, தேவா, ஏ.ஆர். ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, ஹாரீஸ் ஜெயராஜ், அனிருத் என வெவ்வேறு தலைமுறை இசையமைப்பாளர்கள் அனைவரின் இசையிலும் பாடி, அவர்களின் கற்பனைக்குத் தனது குரலால் உயிர் கொடுத்தவர் எஸ். ஜானகி. தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கி நவீன காலம் வரை, ஒவ்வொரு இசையமைப்பாளரின் பாணிக்கு ஏற்பத் தன்னை மாற்றிக் கொண்ட அவரது இசைப் பயணம் அசாத்தியமானது.
நாதஸ்வரத்தோடு போட்டி போட்ட ‘சிங்கார வேலனே தேவா’
1957-ல் 'விதியின் விளையாட்டு' திரைப்படத்தில் அறிமுகமானாலும், எஸ். ஜானகி என்ற பெயரை தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது 'கொஞ்சும் சலங்கை' திரைப்படத்தில் வந்த ‘சிங்கார வேலனே தேவா’ பாடல் தான்.
எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைப்பில் உருவான இப்பாடலில், பிரபல வித்வான் காரைக்குறிச்சி அருணாச்சலத்தின் நாதஸ்வர இசைக்கு இணையாக, போட்டி போட்டு பாடிய அந்தச் சங்கதிகள் அன்றைய இசை உலகையே உற்று நோக்க வைத்தன.
ஒரு புதிய பாடகி, இத்தனை கடினமான கிளாசிக்கல் பாடலை, நாதஸ்வரத்தின் நுணுக்கமான ஒலிகளுக்கு இணையாக எப்படி இவ்வளவு துல்லியமாகப் பாட முடிந்தது என ஒட்டுமொத்த கோலிவுட்டும் வியந்து பார்த்த தருணம் அது.
தேசிய விருது பெற்ற ‘செந்தூரப் பூவே’
இளையராஜாவின் வருகைக்கு பின், ஜானகியின் குரல் தமிழ் மண்ணின் நாடித் துடிப்பாக மாறியது. பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான '16 வயதினிலே' திரைப்படத்தில் இடம் பெற்ற செந்தூரப் பூவே’ பாடல் ஜானகிக்கு மிகப்பெரிய மைல்கல். கிராமத்து வெள்ளந்திப் பெண்ணான 'மயில்' கதாபாத்திரத்தின் மனஓட்டத்தை அப்படியே தன் குரலில் கொண்டு வந்திருப்பார். இப்பாடலின் அபாரமான பாவங்களுக்காக இவருக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.
அசாத்திய குரல் பாவனைகள்
திரையில் நடிக்கும் நடிகையின் வயது மற்றும் சூழல் அறிந்து தன் குரலை அப்படியே மாற்றிக் கொள்வதில் ஜானகி ஒரு ஜீனியஸ். அதற்குச் சான்றாக நிறைய பாடல்களை சொல்லலாம்.
'மூன்றாம் பிறை' திரைப்படத்தில் சில்க் ஸ்மிதாவின் நடனத்திற்கு பின்னணியில் ஒலிக்கும் ‘பொன்மேனி உருகுதே’ பாடலில், குரலிலேயே ஒருவித கிறக்கத்தையும், துள்ளலையும் கொண்டு வந்து பாடிய விதம் அசாத்தியமானது.
தளபதி திரைப்படத்தில் ரஜினிகாந்தின் தாயாக நடித்த ஸ்ரீவித்யாவுக்காக அவர் பாடிய ‘சின்னத்தாயவள்’ பாடலில், ஒரு தாயின் ஒட்டுமொத்த வலியையும், சோகத்தையும் தன் குரல் கனத்தால் வடித்திருப்பார்.
உணர்ச்சிகளின் உச்சம் தொட்ட சோகப் பாடல்கள்
நெஞ்சைப் பிழியும் சோகப் பாடல்களை ஜானகி பாடினால், கேட்கும் கண்கள் தானாகக் கண்ணீர் சிந்துவதைத் தவிர்க்க முடியாது.
'முதல் மரியாதை' திரைப்படத்தில் சிவாஜி கணேசன் - ராதா இருவருக்குமான ஆழமான, அதே சமயம் சோகம் கலந்த ஒருவித காதலை ‘பூங்காற்று திரும்புமா’ என்ற பாடலில் மலேசியா வாசுதேவனுடன் இணைந்து கடத்தியிருப்பார்.
காலத்தால் அழியாத காதல் பாடல்கள்
தமிழ் திரையுலகில் காதல் டூயட் பாடல்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது எஸ்பிபி - ஜானகி இணை தான். இவர்களின் குரல் பொருத்தம் காற்றில் தேனாய் பாயும். பாடல்களுக்கு நடுவே இவர்கள் கொடுக்கும் சிறிய சிரிப்புகள், முனகல்கள், பெருமூச்சுகள் கூட பாடலின் உணர்ச்சியை உச்சத்திற்குக் கொண்டு செல்லும்.
மணிரத்னம் - இளையராஜா கூட்டணியில் தளபதி திரைப்படத்தில் உருவான மெகா ஹிட் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’பாடலில், போருக்குச் செல்லும் கணவனுக்கும், தவிக்கும் மனைவிக்கும் இடையிலான காதலை எஸ்.பி.பி. உடன் இணைந்து பிரம்மாண்டமாகப் பாடியிருப்பார்.
'தேவர் மகன்' திரைப்படத்தில் ஒரு சின்ன முனகலுடன் ஜானகி ‘இஞ்சி இடுப்பழகி’ பாடலைத் தொடங்கும் போதே, ஒட்டுமொத்த ரசிகர்களும் சொக்கிப் போவார்கள். கமலஹாசனுடன் இணைந்து பாடிய இப்பாடலுக்காகவும் ஜானகிக்கு தேசிய விருது கிடைத்தது.
துள்ளல் மற்றும் குத்துப் பாடல்கள்
மெல்லிசையும், சோகமும் மட்டுமல்ல, தியேட்டரையே ஆட வைக்கும் குத்துப் பாடல்களையும் தன் பாணியில் பாடி அசத்தியவர் எஸ்.ஜானகி.
'அன்னக்கிளி' என்ற இளையராஜாவின் முதல் படத்திலேயே ‘மச்சானைப் பார்த்தீங்களா’ என்ற பாடலில் கிராமத்துத் துள்ளல் இசையைத் தன் குரலில் அப்படியே கொண்டு வந்து சேர்த்தார்.
இதேபோல், 'சகலகலா வல்லவன்' திரைப்படத்தில் கமல்ஹாசன் - சில்க் ஸ்மிதா ஆடிய 'நேத்து ராத்திரி யம்மா' பாடலில் எஸ்பிபி-யுடன் இணைந்து இவர் பாடிய பாடல் வேறு ரகம்.
விருதுகளை விட உயர்ந்த கம்பீரம்
நான்கு தேசிய விருதுகள், 14-க்கும் மேற்பட்ட தமிழக அரசின் மாநில விருதுகள் என பல உயரிய விருதுகளைப் பெற்ற எஸ்.ஜானகி, விருதுகளுக்காகவோ புகழுக்காகவோ ஒருபோதும் ஆசைப்பட்டதில்லை. 2013-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்த ‘பத்மபூஷண்’ விருதை, தனக்கு மிகவும் தாமதமாகக் கொடுக்கப்பட்டதாகக் கூறி கம்பீரமாக மறுத்தவர் அவர். விருதுகளைத் தாண்டி, தமிழ் மக்கள் அவரை ‘ஜானகி அம்மா’ என்று அன்போடு அழைப்பதே தனக்குக் கிடைத்த ஆகச்சிறந்த அங்கீகாரம் என்று கருதினார்.
நிலவொளி வீசும் இரவுகளில், தனிமையின் சோகத்தில், காதலின் தவிப்பில் எனத் தமிழர்களின் ஒவ்வொரு உணர்விலும் எஸ்.ஜானகியின் குரல் என்றென்றும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும்.