📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 01, 2026 02:30 AM

 தமிழ் வளர்க்கும் ஆசிரியை!

 தமிழ் வளர்க்கும் ஆசிரியை!

-நமது நிருபர் -:

தமிழகத்தின் சீர்காழி அருகே உள்ள, திருப்பானந்தாலை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ஆசிரியை சித்ரா பாலசுப்ரமணியம், 67.

இவர் தங்கவயலில் குடியேறி, கோரமண்டலில் உள்ள அம்பேத்கர் உயர்நிலை பள்ளியில், 1986ல் தமிழாசிரியையாக பணியில் சேர்ந்தார். இதே பள்ளியில், 33 ஆண்டுகள் பணியாற்றி, 2019ல் வயது மூப்பில் பணியில் இருந்து ஓய்வுபெற்றார்.

இவரது கணவர் பாலசுப்ரமணியமும் ஆண்டர்சன் பேட்டையில் உள்ள நம்பெருமாள் பள்ளி ஆசிரியர்.

இவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், தமிழர்கள் நிறைந்த தங்கவயலில் குடிபெயர்ந்தாலும், இங்கும் தமிழகத்தின் கலை, கலாசார, பண்பாடு, நிறைவான தோழமை நட்பு , ஒழுக்கம், மரியாதை, இவற்றைக் காட்டிலும், மேன்மையான தமிழுணர்வு இவர்களை நெருக்கமாக்கி கொண்டது.

தங்களின் இரண்டாவது தாயகமாக தங்கவயல் நகரை இதயத்தில் ஏற்றுக்கொண்டனர்.

ஆண்டர்சன் பேட்டை 2வது பிளாக்கில் வசித்து வரும் இந்த பெண், இன்று வரை தமிழை, தமிழ் குடும்பங்களை நேசித்து, தமிழோடு வாழ்கிறார்.

அவர் கூறியதாவது:

தமிழுணர்வு ஊற்றெடுக்கும் ஒரு சிறிய தமிழகம் போலவே, மண் வாசம் தங்கவயலில் கமழ்கிறது என்பதே என் கருத்தாகும். இங்குள்ள பாரம்பரிய மிக்க தமிழரின் பண்பாடு, கலாசாரம், பிறருக்கு பிரமிப்பை ஏற்படுத்திய காலமும் இருந்தது.

இங்கு, 100க்கும் அதிகமான தமிழ் பள்ளிகள் இருந்ததாக அறியும்போது, தமிழ் சாகா வரம் பெற்றதாகவே நினைத்தேன்.

காலத்தின் சூழல், கர்நாடகாவில் உள்ள தமிழர் நிறைந்த தங்கவயலில் தமிழ்ப்பள்ளிகளே இல்லாத நிலை ஏற்பட்டிருப்பது மிகுந்த வருத்தமே.

உணர்வுள்ள தமிழர்கள் பலரும் கூட, தம் பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளிகளில் சேர்க்கின்றனர். இதனால் 'தமிழினி மெல்ல சாகும்' என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, தமிழ் குடும்பத்து செல்வங்கள் தமிழை அறிய வேண்டும். தங்களின் வீடுகளில் தமிழில் பேச வேண்டும்.

எனவே தான், பள்ளியில் 33 ஆண்டுகள் ஆசிரியையாக இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என, தமிழின் 'ஐந்திலக்கியம்' கற்றுரைத்த பெருமையை விட, தற்போதுள்ள தமிழின மழலையருக்கு உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய் எழுத்துக்களை சொல்லிக் கொடுப்பதே மேன்மையான திருப்தி ஏற்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் குடும்பத்தின் வீடுகளில் தமிழில் பேச, எழுத, படிக்க, இவர் தமிழை இலவசமாக கற்றுத் தரும் சேவையை செய்து வருகிறார். இவரின் தமிழுணர்வுக்கு ஓய்வில்லை.

தமிழ் மழலையருக்கு அறிவூட்டும் அன்னையாக திகழ்கிறார்.

இறை பக்தி மிக்கவரான இவர், ஆண்டர்சன் பேட்டை நம்பெருமாள் கோவிலில் திருப்பாவை, திவ்ய பிரபந்தம் ஓதுதலும், அதை பிறருக்கு உரிய பொழிப்புரையுடன் விளக்கி, கற்றுக் கொடுத்தும் பாட வைக்கும் பணியையும் செய்து வருகிறார்.