"தமிழ் வரவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்!"
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ். இவர் படித்த தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளியில் சாதாரண மேற்கூரை அமைக்கப்பட்டு இருந்த கட்டடம் ஒன்றை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக மூன்று தளங்கள் கொண்ட கான்கிரீட் கட்டடம் ஒன்றை தனது சொந்த செலவில் கட்டிக் கொடுத்துள்ளார். தற்போது அதற்கு 'தனுஷ் பிளாக்' என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசியவர், "நான் நிறைய நிகழ்வுகளுக்குச் செல்கிறேன். அதில் பல நிகழ்வுகள் எப்போதுதான் முடியும் என இருக்கும். முதல் முறை ஒரு நிகழ்வில் இது முடியவே வேண்டாம், கிளம்பவே வேண்டாம், இங்கேயே இருக்கலாம் எனத் தோன்றியது. அது இங்குதான். என்னுடைய ஆசிரியர்களைப் பார்க்கையில் பல நினைவுகள் வருகின்றன. வாணி மிஸ் மிகவும் கருணைமிக்க நபர். முன்பெல்லாம் நான் படிக்கும்போது ஆங்கிலம் எனக்கு வராது. ஆனால், தமிழ் நன்றாக வரும். இப்போது அப்படியே மாறிவிட்டது.