தமிழக அமைச்சரவையில் இடம் பெற இரு கம்யூ., கட்சிகளிடையே முரண்பாடு
- நமது நிருபர் -
முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அமைச்சரவையில் இடம் பெறுவதில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
த.வெ.க., அரசுக்கு ஆதரவளித்து வரும் கட்சிகளில் காங்கிரஸ், வி.சி.க., முஸ்லிம் லீக் ஆகியவை அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை, த.வெ.க., அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வருகின்றன.
வரும் உள்ளாட்சி தேர்தலில், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் வீரபாண்டியன் விரும்புகிறார். ஆனால், அக்கட்சியில் உள்ள தி.மு.க., ஆதரவு நிர்வாகிகள் சிலர், உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வலியுறுத்தி வருகின்றனர்.
த.வெ.க., ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் தளி - ராமச்சந்திரன், நாகப்பட்டினம் - மாரிமுத்து ஆகியோர் விரும்புகின்றனர். அவர்கள் த.வெ.க., அமைச்சரவையில் இடம் பெறுவதற்கும், வீரபாண்டியன் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.
இது குறித்து வீரபாண்டியன் கூறுகையில், ''த.வெ.க., அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் இடம் பெறும் சூழல் வரும்; அதற்கான காலம் கனிந்து வருகிறது. ''அந்த சூழல் வரும்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து, நம் கட்சி எம்.எல்.ஏ., அமைச்சராகலாம்; அந்த காலம் நெருங்கி வருகிறது,'' என்றார்.
அதே நேரத்தில், த.வெ.க., அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் மற்றொரு கம்யூனிஸ்ட் கட்சியான மா.கம்யூ., அமைச்சரவையில் இடம் பெற மறுத்து வருகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் சண்முகம் கூறுகையில், ''த.வெ.க., அமைச்சரவையில் பங்கு பெற மாட்டோம் என முடிவு எடுத்து, ஏற்கனவே இரண்டு கட்சிகளின் மாநில செயலர்களும் அறிவித்து விட்டோம்.
''தற்போது, எந்த அடிப்படையில் வீரபாண்டியன் கூறினார் என்பதை, அவரிடம் தான் கேட்க வேண்டும். அமைச்சரவையில் இடம் பெற மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,'' என்றார்.
த.வெ.க., அமைச்சரவையில் இடம் பெறுவது தொடர்பாக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், வரும் 20ம் தேதி, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் சென்னையில் நடக்கிறது. அதில், அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து, இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இதுகுறித்து இந்திய கம்யூ., மாநில செயலர் வீரபாண்டியன் கூறியது பற்றி, அவரிடம் தான் கேட்க வேண்டும்.பா.ஜ., ஆளும் மாநிலங்களில், பிற கட்சி எம்.எல்.ஏ.,க்களை கொத்து கொத்தாக இழுத்தும், கட்சியை இரண்டாக, மூன்றாக உடைத்தும் குதிரை பேரம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தமிழகத்தில் நடப்பதே வேறு. அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியின் தலைமை பிடிக்காமல், எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்கின்றனர்.அதே நேரத்தில், எம்.எல்.ஏ.,க்கள் பதவி விலக குதிரை பேரம் நடந்தது எனில், அது கண்டிக்கத்தக்கது. பதவி விலகும் எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக மக்கள் கிளம்பினால், இந்த பிரச்னை முடிவுக்கு வரும்.- பெ.சண்முகம் மாநில செயலர், மார்க்சிஸ்ட் கம்யூ.,
சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் விஜயை, மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் சண்முகம் சந்தித்தார். அப்போது, 'சேலம் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யும் பணியை, பிரான்ஸ் நாட்டின் சூயஸ் நிறுவனத்திடம் வழங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்' என, கோரிக்கை விடுத்தார். பின், அவர் கூறுகையில், ''தேனி மாவட்டத்தில் கடமலைகுண்டு, வருஷநாடு உட்பட, 98 மலைகிராம மக்களை வெளியேற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்காக துணை ராணுவப் படையை பயன்படுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால், தேனி மாவட்டம் முழுதும் பதற்றம் நிலவுகிறது. எனவே, அந்த மக்கள் தொடர்ந்து அங்கேயே வசிப்பதற்கு, மாநில வன உரிமை சட்டத்தை தமிழக அரசு பயன்படுத்த வேண்டும் என, முதல்வர் விஜயிடம் வலியுறுத்தினோம்,'' என்றார்.