📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 07, 2026 06:03 PM

தமிழக அரசு மருத்துவமனைகளில் மும்மொழிக் கொள்கை சர்ச்சை

தமிழக அரசு மருத்துவமனைகளில் மும்மொழிக் கொள்கை சர்ச்சை

சென்னை: தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து, மாத்திரைகளுக்கான காகித உறைகளில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் அச்சிடப்பட்டிருப்பது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதற்கு திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழக அரசு மருத்துவமனைகளில் மறைமுகமாக மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

“முதலில் கரூர் அரசு மருத்துவமனையில் மருந்து உறைகளில் இந்தி மொழி இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது கோவையிலும் அதேபோன்ற சூழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது,” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றும் மொழி உரிமையில் சமரசம் செய்துகொள்ளும் போக்கே நிலவுகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் இந்தி மொழிக்கான அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், இது மாநில உரிமைகளுக்கும் தமிழ் மொழிக்கும் இழைக்கப்படும் மற்றொரு துரோகம் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருத்துவச் சீட்டுகள், மருந்து உறைகளில் தமிழ், ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்தி வார்த்தைகள் இடம்பெற்றிருப்பது சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.