தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி
தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி-அமைச்சர் செங்கோட்டையன் மோதல்: கூச்சல், குழப்பம்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு மாற்றுக் கட்சியில் சேர்ந்தது குறித்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் இடையே மோதல் ஏற்பட்டதால், அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. தமிழக சட்டசபையில் இன்று மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் ஆஸ்டின் பேசுகையில், பட்ஜெட் கூட்டத்தில் உதயநிதி பங்கேற்பதை தடுக்க சதி நடந்தது. சதியை முறியடித்து அவையில் வீற்றிருக்கிறார் உதயநிதி. சிறுபான்மை ஆணைய தலைவர் பெலிக்ஸ் ஜெரால்டு தொலைக்காட்சி அரசியல் விவாதங்களில் பங்கேற்கக் கூடாது” என்றார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசுகையில், ‘‘சிறுபான்மை ஆணைய தலைவர் தனிப்பட்ட விவாதம். பொதுமேடையில் பேசவே கூடாது என்றெல்லாம் கிடையாது. கடந்த ஆட்சியில் பீட்டர் அல்போன்ஸ், லியோனி போன்றவர்கள் அரசியல் விவாதங்களில் பேசி உள்ளனர்’’ என்றார்.அப்போது எழுந்த அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம், திமுக எம்எல்ஏ ஆஸ்டின் பல கட்சிகளில் இருந்தவர். இப்போது திமுகவில் இருக்கிறார் என்றார். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.
கே.என்.நேரு: எம்.எல்.ஏ. ஆஸ்டின் பேசியபோது அமைச்சர் பேசலாம், அவை முன்னவர் பேசலாம் தளவாய் சுந்தரம் ஏன் பேசுகிறார்?. இருவரும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கும் ஏதாவது இருக்கலாம். அதற்காக அவையில் வந்து பேசலாமா?. எப்படி அவருக்கு பேச அனுமதி கொடுக்கலாம். எந்த சம்பந்தமும் இல்லாமல் அவர் ஏன் பேசுகிறார்.
சபாநாயகர்: விளக்கம் கூற வருகிறார் என நினைத்து தான் தளவாய் சுந்தரம் பேச அனுமதித்தேன்.
ஆஸ்டின்( திமுக): ஒரு மாதத்தில் 6 பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஆதாயம் இன்றி ராஜினாமா செய்வார்களா? 6 தொகுதிகளில் எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில் மக்கள் தங்களது பிரச்சனைகளை யாரிடம் கூறுவது.
சபாநாயகர்: இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க முடியும். நாம் முடிவு செய்ய முடியாது.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா: மக்கள் பிரச்சனைகளைக் கேட்டு நிறைவேற்றவதற்காக 6 தொகுதிகளுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி: 6 தொகுதிகளின் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் அந்த தொகுதி மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. அந்த பகுதியில் உள்ள பொறுப்பு அமைச்சரால் தொகுதி பிரச்னையை முழுதுமாக அறிந்துகொள்ள முடியாது என்பதால்தான் சட்டப்பேரவை உறுப்பினர் தேவை.
அவை முன்னவர் செங்கோட்டையன்: விரைவாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆர்வம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். அத்தனை பேரும் வெற்றி பெறுவார்கள். அதிலும் மாற்றுக்கருத்து இல்லை.
எடப்பாடி பழனிசாமி: விவாதம் வேறு மாதிரி போகுது. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. வெற்றி பெற்ற பின் அந்த எம்எல்ஏ தங்களை சந்தித்து ஒரு மனு கொடுக்கிறார். இதன்பின் சட்டசபை நிகழ்ச்சியில் ஒருநாள் பங்கேற்றுவிட்டு பதவியை ராஜினாமா செய்த எம்எல்ஏ, மேல்மாடியில் உள்ள ஒரு கட்சியில் சேர்கிறார்.
சபாநாயகர்: நீங்கள் (எடப்பாடி பழனிச்சாமி) சொன்னதெல்லாம் வழக்கில் இருக்கிறது. அதை அவைகுறிப்பில் இருந்து நீக்குகிறேன். அப்போது, எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது மைக் அணைக்கப்பட்டதால் அதிமுக எம்எல்ஏக்கள் மைக் வழங்க வேண்டும் என்று எழுந்து நின்று வலியுறுத்தினர். இதற்கு பதிலடியாக தவெக எம்எல்ஏக்களும் கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
அவை முன்னவர் செங்கோட்டையன்: எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் வாபஸ் பெற்றது குதிரை பேரம் இல்லையா?
எடப்பாடி பழனிச்சாமி: அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஒரு கட்சியில் இருந்து வெற்றி பெற்றுவிட்டு ராஜினாமா செய்துவிட்டு ஏன் தவெகவில் சேர வேண்டும்?. அப்போது எடப்பாடி பழனிச்சாமி, ‘‘சத்தமாக பேசினார், உடனே பேரவைத் தலைவர் ‘இது என்ன பொதுக்கூட்டமா? இங்கு என்ன பொதுக்கூட்டமா நடத்துகிறோம்?.
சபாநாயகர்: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உணர்ச்சிவசப்படாமல் பேச வேண்டும். உங்கள் உடலை வருத்திக்கொள்ளக்கூடாது என்று சொல்கிறேன்.
இவ்வாறு காரசாரமாக விவாதம் நடந்தது.