📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 25, 2026 11:04 PM

திமுகவில் அதிகார பதவிகளை கைப்பற்ற உதயநிதி

திமுகவில் அதிகார பதவிகளை கைப்பற்ற உதயநிதி

- நமது நிருபர் -

திமுகவில் பதவி பறிபோகும் நிலையில் உள்ள, மாவட்ட செயலாளர்கள் சிலர், தலைமை நிலையச் செயலாளர், துணை பொதுச்செயலாளர் பதவிகளை கைப்பற்ற காய் நகர்த்தி வருகின்றனர். பதவிகளை கைப்பற்ற, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி மற்றும் துணை பொதுச்செயலாளர் கனிமொழி ஆகிய இருவரின் ஆதரவாளர்கள் மத்தியில், கடும் போட்டி உருவாகி உள்ளது.

தேர்தல் தோல்விக்கு பின், கட்சியை பலப்படுத்தவும், இளம் தலைமுறைக்கு வாய்ப்பளிக்கவும், திமுக தலைமை முடிவு செய்துள்ளது. இந்நிலையில், கட்சியின் தலைமையகமான அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், செயற்குழுக் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில், கட்சியின் அமைப்பு ரீதியான மாவட்ட எண்ணிக்கை 77ல் இருந்து, 110ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்களுக்கான, அதிகபட்ச வயது 70 எனவும், மூன்று முறை மட்டுமே, அப்பதவியில் இருக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பகுதி, மாநகர மற்றும் வார்டு கமிட்டி செயலாளர்களுக்கு வயது வரம்பு மற்றும் இரண்டு முறை மட்டுமே பதவி எனவும் பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இப்படி, அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், கட்சியில் அதிகாரம்மிக்க பதவிகளை கைப்பற்றுவதில், உதயநிதி மற்றும் கனிமொழி தரப்பினர் மத்தியில், கடும் போட்டி உருவாகியுள்ளது.

திமுக மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:

திமுக செயற்குழு முடிவால், முன்னாள் அமைச்சர்கள் வேலு, காந்தி, மஸ்தான், முத்துசாமி, ரகுபதி, ராமசந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட 13 பேரின் மாவட்ட செயலாளர்கள் பதவி பறி போகிறது. முன்னாள் அமைச்சர்கள் உட்பட 8 பேரின், மண்டல பொறுப்பாளர் பதவிகளும் கலைக்கப்பட உள்ளது.

இவர்களில் சிலர், துணை பொதுச்செயலாளர், அமைப்பு செயலாளர், முதன்மை செயலாளர், தலைமை நிலையச் செயலாளர் போன்ற பதவிகளுக்கு, காய் நகர்த்தி வருகின்றனர். 'பொருளாளர் பதவி தரா விட்டால், தவெக சென்று விடுவோம்' என, மூத்த மாவட்ட செயலாளர் ஒருவர், தன் ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார்.

இளைஞரணி நிர்வாகிகள், 30 பேருக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்க வேண்டும்' என, உதயநிதியும், 'உட்கட்சி தேர்தல் நடத்தி, மாவட்ட செயலாளர்களை தேர்வு செய்யலாம்' என, கனிமொழியும், கட்சி தலைமையிடம் வலியுறுத்தி உள்ளனர். மேலும், கட்சி பதவி தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலினிடம், கனிமொழி நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே, 'கனிமொழிக்கு அதிகாரம்மிக்க பதவி வழங்க கூடாது,' என, முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையில் இயங்கும், கட்சியின் ஐடி அணி நிர்வாகிகள் சிலர், சமூக வலைதளங்கள் வாயிலாக எதிர்ப்பு தெரிவித்திருப்பது, கனிமொழி ஆதரவாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மொத்தத்தில், ஸ்டாலின், கனிமொழி தரப்பில் சீனியர்களும், உதயநிதி தரப்பில் ஜூனியர்களும், பதவிகளை கைப்பற்ற, கடும் பிரயத்தனம் செய்து வருகின்றனர்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.