📅 Sunday, 02 August 2026 IST | ஆடி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 02, 2026 07:33 AM

தமிழக நீர்வளத்துறை செயலாளர் திடீர் மாற்றம்: புதிய செயலாளராக பிரசாந்த் எம்.வடநரே நியமனம்

தமிழக நீர்வளத்துறை செயலாளர் திடீர் மாற்றம்: புதிய செயலாளராக பிரசாந்த் எம்.வடநரே நியமனம்

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க வேண்டும் என்று மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுத்து வந்ததால், பெரிய பரபரப்பு நிலவி வந்த நிலையில், தற்போது, தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு திடீரென இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் காவிரி நதி நீர் பிரச்னை தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு அதன்படி தமிழகத்திற்கான தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த முறை, தமிழகத்திற்கான காவிரி நீரை 15 நாட்களுக்குள் திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. ஆனால் கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிடமாட்டோம் என்றும் ஆணையத்தில் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் கூறியிருந்தது.

இதனிடையே, தென்மேற்கு பருவமழை காரணமாக, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், கர்நாடகா அணைகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. கபினி அணையில் நீர்வரத்து 17,000 கன அடியாக அதிகரித்து, அணையில் இருந்து 12,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக கர்நாடக எல்லை பகுதியான ஒகேனக்கலில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக அரசின் நீர்வளத் துறை செயலராக பிரசாந்த் எம்.வடநரே நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் நீர்வளத்துறை செயலாளராக இருந்த சத்யபிரதா சாகு மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பிரசாந்த் வடநரே நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் செயலாளராக பணியாற்றி வந்த பிரசாந்த் வடநரே தற்போது பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

மேலும், இவர் ஏற்கனவே இருந்த ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் செயலாளர் பணி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது. அதே சமயம், நீர்வளத் துறை செயலாளராக இருந்த சத்யபிரதா சாகு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.