📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka May 27, 2026 08:30 PM

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த இலங்கை ஆடவர் கைது

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த இலங்கை ஆடவர் கைது

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த சந்தேகத்தில் இலங்கைக் குடியுரிமைக்கான அடையாளப் பத்திரங்களை வைத்திருந்த ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த ஆடவர் ஆப்ரகாம் என்றும் பிரான்சில் வசிப்பவர் அவர் என்றும் விசாரணையில் தெரிய வந்தததாகக் காவல்துறை கூறியது.

கடந்த புதன்கிழமை (மே 20) தோஹா வழியாக பிரான்ஸ் செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய அந்த ஆடவர் சென்னை அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்தார்.

குடிநுழைவு முகப்பில் அவரது கடப்பிதழைச் சோதித்த அதிகாரி, ஆப்ரகாமின் இடது ஆட்காட்டி விரலில் தேர்தலில் வாக்களித்ததற்கான மை இருந்ததைக் கண்டார். சந்தேகப்பட்டு விசாரித்தபோது, சென்ற மாதம் பிரான்சிலிருந்து அருப்புக்கோட்டை சென்ற அவர் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்தது தெரியவந்தது.

இந்தியக் குடிமகன் என்பதற்கான சான்று எதுவும் அவரிடம் இல்லை. ஆனால், இலங்கைக் குடியுரிமையையும் இலங்கைக் கடப்பிதழையும் அவர் வைத்திருந்ததாக அதிகாரிகள் கூறினர். இலங்கைக் கடப்பிதழைப் பயன்படுத்தி அவர் பிரான்சிலிருந்து இந்தியா வந்ததும் கண்டறியப்பட்டது.

குடிநுழைவு அதிகாரிகளின் விசாரணைக்குப் பின்னர், சென்னை மத்திய குற்றப்பிரிவின்கீழ் இயங்கும் போலி கடப்பிதழ் கண்டறியும் குழுவிடம் ஆப்ரகாம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த 19 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனால், தமிழ்நாட்டு விமான நிலையங்களில் இந்திய வம்சாவளியினர் மீது கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். வாக்களிப்பின்போது இடது ஆட்காட்டி விரலில் வைக்கப்படும் மை கிட்டத்தட்ட இரு மாதங்களுக்கு அழியாது என்பது குறிப்பிடத்தக்கது.