📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 01, 2026 10:33 PM

தமிழகத்தில் உணவுப் பஞ்சம் ஏற்படும் பேராபத்து: காவிரி விவசாயிகள் சங்கம் கவலை

தமிழகத்தில் உணவுப் பஞ்சம் ஏற்படும் பேராபத்து: காவிரி விவசாயிகள் சங்கம் கவலை

திருவாரூர்: குறுவை சாகுபடியை இழந்து சம்பாவும் கேள்விக் குறியாகிவிட்டதால், உணவு உற்பத்தியை இழந்து தமிழகத்தில் உணவுப் பஞ்சம் ஏற்படும் பேராபத்து உள்ளது என தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் எச்சரித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே பெரியகுருவாடி கிராமத்தில் பாலைவனமாக மாறிவரும் காவிரி டெல்டாவை பாதுகாக்க கர்நாடகாவிடம் தண்ணீரை பெற்றுத்தர வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: காவிரி டெல்டாவில் 13 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாலை வனம்போல காட்சியளிக்கின்றன. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து குடிநீருக்கே பஞ்சம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளும், தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்து அகதிகளாக வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. குறுவையை இழந்துவிட்டோம். தற்போது சம்பாவும் கேள்விக்குறியாகிவிட்டது.

இதனால், உணவு உற்பத்தியை இழந்து தமிழகத்தில் உணவுப் பஞ்சம் ஏற்படும் பேராபத்து உள்ளது. இந்நிலையில் விநாடிக்கு 3,500 கன அடி தண்ணீரை கர்நாடகா விடுவிக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், அதை நிறைவேற்ற கர்நாடகா மறுத்துள்ளது.

அங்கு நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டத்தை கர்நாடகா ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் அண்டை மாநில உறவுகளை சீர்குலைக்க கர்நாடக முதல்வர் முயற்சிக்கிறார். எனவே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடகா கூட்டும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு தடை விதிக்க முன்வர வேண்டும் என்றார்.