📅 Sunday, 02 August 2026 IST | ஆடி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 01, 2026 08:32 AM

தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பதை கண்டித்து கர்நாடகாவில் ஆக.13

தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பதை கண்டித்து கர்நாடகாவில் ஆக.13

பெங்களூரு: காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறப்பதை கண்டித்து கர்நாடகாவில் ஆகஸ்ட் 13-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாடக அரசு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3500 கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என நேற்று முன் தினம் உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 4-வது நாளாக கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு, மங்களூரு ஆகிய இடங்களில் கன்னட அமைப்பினரும், விவசாய சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூருவில் கன்னட அமைப்பினர் 100க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் தமிழகத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர். மண்டியாவில் 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர். அப்போது போலீஸார் அவர்களை தடுத்து கைது செய்தனர்.

இந்நிலையில் கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகாவில் மழை இல்லாததால் அணைகள் வறண்டு காணப்படுகின்றன. ஆனால் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவும், காவிரி மேலாண்மை ஆணையமும் தமிழகத்திற்கு ஆதரவாக உத்தரவிட்டுள்ளன. இதனை நாங்கள் ஏற்க மாட்டோம். ஒரு சொட்டு நீரைக் கூட தமிழகத்திற்கு திறக்க விட மாட்டோம்.

கர்நாடகாவுக்கு அநீதி ஏற்பட்டதை கண்டித்து ஆகஸ்ட் 13-ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கர்நாடகா முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும். மாநிலம் முழுவதும் பேருந்துகள், வாடகை ஆட்டோ, டாக்ஸி, பள்ளி, கல்லூரிகள் என எதுவும் இயங்காது. தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மூடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.