தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அறவே இல்லை
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அறவே இல்லை - கனிமொழி
காவல் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த அருணாச்சலத்தின் குடும்பத்தினர் தங்களை காவல்துறை பயமுறுத்துவதாக கூறியதாக கனிமொழி தெரிவித்தார்.
Published : July 25, 2026 at 10:25 PM IST
தூத்துக்குடி: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்பது சில பேருக்காக மட்டுமே செயல்படக்கூடியதாக மாறிவிட்டாக கனிமொழி விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த இளைஞர் அருணாச்சலத்தின் இல்லத்திற்கு இன்று (ஜூலை 25) நேரில் சென்ற தூத்துக்குடி தொகுதியின் எம்.பி.யும், திமுகவின் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி, முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
அதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக வழக்கறிஞரால் தாக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் லிங்க குமாரின் குடும்பத்தையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி எம்.பி., "லிங்க குமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அவர் கட்டியுள்ள கடையை இடித்து அகற்ற வேண்டும் என்று வழக்கறிஞர் தாஸ் என்பவர் அந்த குடும்பத்திற்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் காவல்துறையினர் புகார் அளிக்க லிங்க குமார் பலமுறை முயற்சி செய்திருக்கிறார். ஆனால், காவல்துறை அதை எடுத்துக் கொள்ள தயாராக இல்லை. லிங்க குமார் மற்றும் அவரது மனைவி, மகள், மகன் என குடும்பத்தினர் அனைவரும் தாக்கப்பட்டுள்ளனர். ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயாராக இல்லை.
லாக்கப் மரணம் அருணாச்சலம் வீட்டுக்கு சென்று அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைச் சந்தித்துவிட்டு வந்தோம். அதுவும் மிகவும் மர்மமான முறையில் எந்த தெளிவும் இல்லாமல் என்ன நடந்தது என்று பெற்றோர்களுக்கு தெரியாமல் ஒரு மூடு மந்திரமாக தான் பல கதைகள் ஒவ்வொரு நேரமும் ஜோடிக்கப்படுகிறது.
அருணாச்சலம் குடும்பத்தில் உள்ளவர்களைத் தொடர்ந்து பயமுறுத்தி நியாயம் கேட்டு போராடினால், உங்கள் மீது வழக்கு போடுவோம், உங்களை கைது செய்வதற்கு தயங்க மாட்டோம் என்று காவல்துறையினர் சொல்கிறார்கள் என்று கூறுகின்றனர்; இதனால் அவர்கள் பயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிற சூழ்நிலை உள்ளது. நாட்டில் சட்டம்- ஒழுங்கு காவல்துறை என்ற ஒன்று இருக்கிறதா? இல்லையென்றால் அது சில பேருக்காக மட்டும் செயல்படக்கூடிய ஒன்றாக மாறிவிட்டதா?" என்று கேள்வி எழுப்பினார்.