📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 11, 2026 02:01 PM

தமிழ்நாட்டின் ஷாக் புள்ளிவிவரம்! கடந்த 5 ஆண்டின் அதிர்ச்சி கணக்கு! மக்கள் வாங்கிய கடன் இவ்வளவா?

தமிழ்நாட்டின் ஷாக் புள்ளிவிவரம்! கடந்த 5 ஆண்டின் அதிர்ச்சி கணக்கு! மக்கள் வாங்கிய கடன் இவ்வளவா?

தமிழ்நாட்டின் ஷாக் புள்ளிவிவரம்! கடந்த 5 ஆண்டின் அதிர்ச்சி கணக்கு! மக்கள் வாங்கிய கடன் இவ்வளவா?

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய வங்கிகளின் கிரெடிட் கார்டு நிலுவை ரூ.1.47 லட்சம் கோடியில் இருந்து ரூ.2.86 லட்சம் கோடியாக இருமடங்காக உயர்ந்துள்ளது. இதில் தனியார் வங்கிகள், குறிப்பாக HDFC, ICICI, Axis போன்றவை முன்னிலையில் உள்ளன. கடன் வெடிப்பு சூழலில், ரிசர்வ் வங்கி 2025 வழிகாட்டுதலால் வாடிக்கையாளர் ஒப்புதல், வட்டி, கட்டணங்கள் குறித்து தெளிவான தகவல் வழங்கல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 2022 மார்ச் மாதத்தில் ரூ.1.47 லட்சம் கோடியாக இருந்த மொத்த கிரெடிட் கார்டு நிலுவை, 2026 மார்ச் மாதத்தில் ரூ.2.86 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே. நவாஸ்கனி எழுப்பிய கேள்விக்கு, மத்திய நிதி அமைச்சகம் திங்கள்கிழமை மக்களவையில் அளித்த பதிலில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதில் தனியார் துறை வங்கிகளின் பங்கு மிக அதிகமாக உள்ளது. அவற்றின் நிலுவைத் தொகை 2022 மார்ச்சில் ரூ.1.46 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2026 மார்ச்சில் ரூ.2.81 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

அதே காலகட்டத்தில் பொதுத்துறை வங்கிகளின் கிரெடிட் கார்டு நிலுவை ரூ.1,123 கோடியிலிருந்து ரூ.5,667 கோடியாக அதிகரித்துள்ளது. தனிப்பட்ட வங்கிகளைப் பொறுத்தவரை, 2026 மார்ச் நிலவரப்படி HDFC வங்கி ரூ.1.12 லட்சம் கோடி நிலுவையுடன் முதலிடத்தில் உள்ளது. 2022 மார்ச்சில் இந்தத் தொகை ரூ.71,928 கோடியாக இருந்தது. ICICI வங்கியில் ரூ.54,865 கோடியும், Axis வங்கியில் ரூ.49,702 கோடியும் நிலுவையில் இருந்தன.

IDFC First வங்கியின் நிலுவை ரூ.2,007 கோடியிலிருந்து ரூ.9,165 கோடியாக உயர்ந்துள்ளது. RBL வங்கியில் ரூ.16,430 கோடியும், கோடக் மஹிந்திரா வங்கியில் ரூ.12,852 கோடியும், இண்டஸ்இண்ட் வங்கியில் ரூ.9,962 கோடியும் நிலுவையில் இருந்தன. Yes வங்கியின் நிலுவையும் ரூ.2,159 கோடியிலிருந்து ரூ.8,827 கோடியாக அதிகரித்துள்ளது.

எனினும், கிரெடிட் கார்டுகள் வழங்கப்படுவது மற்றும் பயன்படுத்தப்படுவது தொடர்பான மாநில வாரியான தகவல்களை ரிசர்வ் வங்கி பராமரிப்பதில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வழங்கப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள், வங்கிகள் வாரியாக கிரெடிட் கார்டு பெறத்தக்க நிலுவையில் உள்ள கடன் தொகையை அடிப்படையாகக் கொண்டவை என்றும் நிதி அமைச்சகம் விளக்கியுள்ளது.

மேலும், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் தொடர்பான ரிசர்வ் வங்கியின் 2025ஆம் ஆண்டு வழிகாட்டுதலின்படி, கார்டு வழங்குதல், செயல்படுத்துதல், கடன் வரம்பை அதிகரித்தல் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறி கடன் பெறும் வசதி ஆகியவற்றுக்கு வாடிக்கையாளரின் வெளிப்படையான ஒப்புதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதம், கட்டணங்கள், பிற செலவுகள் மற்றும் வாடிக்கையாளரின் பொறுப்புகள் குறித்து ‘முக்கிய தகவல் அறிக்கை’ மற்றும் முக்கிய விதிமுறைகள் மூலம் வங்கிகள் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.

பொறுப்பான கடன் பயன்பாடு, நிதி ஒழுக்கம், டிஜிட்டல் நிதி அறிவு மற்றும் சைபர் மோசடி தடுப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 128 நிதி கல்வி மையங்களும், 75 நிதி எழுத்தறிவு மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

2025-26ஆம் ஆண்டில் இந்த 128 நிதி கல்வி மையங்கள் மூலம் 92,096 விழிப்புணர்வு முகாம்களும், 75 நிதி எழுத்தறிவு மையங்கள் மூலம் 10,419 முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன. பொறுப்பான கடன் பயன்பாடு, கடன் ஒழுக்கம், டிஜிட்டல் நிதி அறிவு, சைபர் மோசடி தடுப்பு மற்றும் சரியான நிதி மேலாண்மை உள்ளிட்டவை குறித்து இந்த முகாம்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் மூன்று நிதி கல்வி மையங்களும், இரண்டு நிதி எழுத்தறிவு மையங்களும் செயல்பட்டு வருகின்றன. 2025-26ஆம் ஆண்டில் இவற்றின் மூலம் முறையே 2,160 மற்றும் 809 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சிறு தொழில் முனைவோர், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்காகவும் தனிப்பட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு, பொறுப்பான கடன் பயன்பாடு, கடன் ஒழுக்கம், டிஜிட்டல் நிதி அறிவு, சைபர் மோசடி தடுப்பு மற்றும் நிதி முடிவெடுத்தல் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.