தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க வேண்டுமா, வேண்டாமா?
தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க வேண்டுமா, வேண்டாமா? - காங்கிரஸ் எம்பி பிரவீன் சக்கரவர்த்தி கேள்வி
தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பவர்கள், தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்பவர்கள் என காங்கிரஸ் எம்பி பிரவீன் சக்கரவர்த்தி விமர்சித்துள்ளார்.
Published : August 8, 2026 at 4:04 PM IST
சென்னை: தமிழ்நாட்டின் உரிமையை நாம் பாதுகாக்க வேண்டுமா, வேண்டாமா? என்று காங்கிரஸ் எம்பி பிரவீன் சக்கரவர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
2026- 2027 தமிழ்நாடு பட்ஜெட் அறிக்கை குறித்து பொதுமக்கள் எளிதில் புரிந்துக்கொள்ளும் வகையில் “Decoding Tamil Nadu Budget 2026- 2027” என்ற சிறப்பு நிகழ்ச்சி இன்று (ஆக.08) சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாநில பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள், வருவாய் மற்றும் செலவினங்கள், அரசின் நிதிநிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தொழில்முறைப் பிரிவுத் தலைவருமான பிரவீன் சக்கரவர்த்தி, பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் ஆகியோர் பங்கேற்று பட்ஜெட் தொடர்பான கருத்துகளையும், விளக்கங்களையும் வழங்கினர். அத்துடன், பட்ஜெட்டின் தாக்கம் மற்றும் தமிழ்நாட்டின் பொருளாதார நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரவீன் சக்கரவர்த்தி, "தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்பாற்றுவதற்காக தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தால் தமிழ்நாட்டின் பங்கு குறைக்கப்படும். தமிழ்நாட்டின் குரல் ஒடுக்கப்படும். இதுகுறித்து அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து ஆலோசனை செய்து என்ன முடிவு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கூட்டம் நடத்ததப்படுகிறது. இதில் கட்சி வேறுபாடு எதுவும் இல்லை. இந்தக் கூட்டத்தை ஏன் சில கட்சிகள் புறக்கணிக்கிறார்கள் என்பது குறித்து அவர்களிடம் தான் கேள்வி கேட்க வேண்டும்.
மத்திய அரசு இந்த மசோதாவை எடுத்து வருவதற்காக முயற்சி செய்கிறார்கள் இல்லையா?. அப்போது தமிழ்நாட்டின் உரிமையை நாம் பாதுகாக்க வேண்டுமா, வேண்டாமா? அதற்காக அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக குரல் கொடுக்க வேண்டாமா? இதில் கவனம் செலுத்தாமல் வேறு என்ன செய்ய வேண்டும்? இந்த மசோதாவை யார் எந்த கட்சியைச் சார்ந்தவர்கள் ஆதரித்தாலும், அவர்கள் இந்த நாட்டின் எட்டப்பன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மசோதாவை ஆதரிப்பவர்கள் தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்பவர்கள்.
இன்றைய கூட்டத்தைப் புறக்கணித்திருப்பது குறித்து திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தான் கேட்க வேண்டும். தமிழ்நாட்டின் குரல் நாடாளுமன்றத்தில் புறக்கணிக்கப்படுகிறது அதன் ஒரு முன்னெடுப்புதான் இந்த தொகுதி மறுவரையறை. இது கட்சியின் விவகாரம் அல்ல, இது தமிழ்நாடு மக்களுக்கு ஒட்டுமொத்தமாக செய்கின்ற துரோகம். இந்த மசோதாவைத் தீவிரமாக எதிர்க்க வேண்டும், ராகுல் காந்தி பிரதமராக இருந்திருந்தால் கண்டிப்பாக இதை கொண்டு வந்திருக்கமாட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது மறைமுகமான ஆதரவு என்பதை சுட்டிக்காட்டுகிறது" என்று தெரிவித்துள்ளார்.