📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 15, 2026 08:32 PM

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக பணீந்திர ரெட்டி நியமனம்!

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக பணீந்திர ரெட்டி நியமனம்!

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கே. பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருடன் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஏ. நசீர் அகமது மற்றும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ரீட்டா ஹரிஸ் தக்கர் ஆகியோர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

திடீர் மாற்றத்திற்கான பின்னணி..

தமிழகத்தில் அண்மைக்கால ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, TNRERA அமைப்பில் இருந்த முந்தைய பொறுப்பாளர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

முன்னதாக தலைவராக இருந்து ஓய்வுபெற்ற முன்னாள் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உறுப்பினர்களான எல். சுப்பிரமணியன், டி. ஜெகநாதன் உள்ளிட்டோர் அண்மையில் தங்களது பதவிகளிலிருந்து விலகினர்.

அனைத்து உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் விலகியதால், புதிய வீட்டுத் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதிலும், நுகர்வோர் வழக்குகளை விசாரிப்பதிலும் முடக்கம் ஏற்பட்டது.

இதன் காரணமாக தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இல்லாததால், ரியல் எஸ்டேட் சட்டம் 2016-இன் கீழ் இந்த ஆணையம் தனது சட்டப்பூர்வ கடமைகளைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

அரசிடமிருந்து 6 மாத அவசர உத்தரவு..

சட்டத்தின் பிரிவு 82-ஐப் பயன்படுத்தி, தற்போதைய TNRERA அமைப்பை 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக முடக்கி, அதற்குப் பதிலாக இந்த புதிய குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

இந்த புதிய குழு அடுத்த 6 மாதங்கள் வரை அல்லது புதிய நிரந்தர ஆணையம் மாற்றி அமைக்கப்படும் வரை, TNRERA-வின் முழு அதிகாரங்களையும் பயன்படுத்தி வழக்குகளை விசாரிக்கும்.

பணீந்திர ரெட்டியின் நிர்வாக அனுபவம்..

1990-ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான பணீந்திர ரெட்டி, 35 ஆண்டுகள் அரசுப் பணியாற்றி கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார்.

அவர் தனது பணிக்காலத்தில் உள்துறை, நிதித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறை போன்ற மிக முக்கிய துறைகளின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி நீண்ட நிர்வாக அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.