தமிழ்த்தாய் வாழ்த்து
தமிழ்த்தாய் வாழ்த்து - சட்டப்பேரவையில் நாளை தனித் தீர்மானம் கொண்டு வருகிறார் முதல்வர் விஜய்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
Published : August 9, 2026 at 7:20 PM IST
சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் நாளை தனித் தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட வேண்டும் என்பதை உறுதிச் செய்யும் வகையில் முதலமைச்சர் இந்த தனித் தீர்மானத்தை முன்மொழிய உள்ளார். இந்த தீர்மானம் திமுக, அதிமுக உள்பட அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூலை 28- ஆம் தேதி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் கலந்து கொண்டிருந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு திமுக, நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக.தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த ஆகஸ்ட் 05- ஆம் தேதி தொடங்கிய நிலையில், அன்றைய தினம் நிதியமைச்சர் மரிய வில்சன், 2026-2027- ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றினார்.
பட்ஜெட்டில் அண்ணன் சீர் திட்டம், 11-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் கூடிய பிராண்டட் மிதிவண்டிகள் வழங்கும் திட்டம், கைம்பெண்கள், திருநர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 100% மானியத்தில் ஆடுகள் வழங்கும் திட்டம், இந்தியாவின் முதல் ஏஐ நகரம் போன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின.
அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 06- ஆம் தேதி வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத், வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றினார். பின்னர் ஆகஸ்ட் 07- ஆம் தேதி மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில் திமுக, தவெக உறுப்பினர்களிடையே காரசார விவாதமும், பல சுவாரஸ்ய நிகழ்வுகளும் நடைபெற்றன.
அதன் தொடர்ச்சியாக, மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வுத் தொடர்பாக நிதியமைச்சர் மரிய வில்சன், பேரவையில் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில், சட்டப்பேரவையை நாளை (ஆக.10) காலை 09.30 மணிக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ஒத்திவைத்திருந்தார்.
இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சட்டப்பேரவையில் நாளை தனித் தீர்மானத்தைக் கொண்டு வர உள்ளார்.
கடந்த ஜூன் மாதம் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாடு அரசின் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.