'தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம்'
'தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம்' - சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் விஜய்
தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
Published : August 10, 2026 at 11:37 AM IST
சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று சட்டமன்றத்தில் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 5ஆம் தேதி தொடங்கி வரும் செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி இன்றை சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது முதலமைச்சர் விஜய் பேசுகையில், “தமிழ்த்தாய் வாழ்த்தை நிகழ்ச்சிகளில் முதலில் பாடுவது அரசியலமைப்புக்கும், இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும் எதிரானது அல்ல. மாறாக, வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் உயரிய பண்பாட்டையும், மொழிப் பன்மையையும் வெளிப்படுத்துவதாகும்.
தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியமில்லை. அது தமிழர்களின் பொது அடையாளம். அவை நம்மை வேறுபடுத்துவது அல்ல, நம்மை ஒன்றிணைப்பதாகும்.
தமிழ்த்தாய் வாழ்த்தின் கண்ணியத்தையும், தமிழின் தொன்மையையும், தமிழர் பண்பாட்டின் பெருமையையும் பாதுகாக்கும் இந்த உயரிய பணியில், இந்த சட்டமன்றப் பேரவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கட்சி வேறுபாடுகளை மறந்து, ஒன்றிணைந்து ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ் உலகின் தொன்மை வாய்ந்த செம்மொழிகளில் ஒன்றாகவும், தமிழர் நாகரிகம் உலகின் மிகப் பழமையான பண்பாட்டு மரபுகளில் ஒன்றாகவும் விளங்குவதை இப்பேரவை பெருமையுடன் பதிவு செய்கிறது.
மனோன்மணியம் சுந்தரனார் 1890-ஆம் ஆண்டு எழுதிய ’மனோன்மணியம்’ என்ற நாடக நூலின் பாயிரப் பகுதியில் இடம்பெற்றுள்ள பாடலிலிருந்து ’தமிழ்த்தாய் வாழ்த்து’ எடுக்கப்பட்டது. 1970ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி முதல் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.
மேலும், 2021ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி முதல் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மாநிலப் பாடல் என்ற அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில், நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு 'தமிழ்த்தாய் வாழ்த்து' கட்டாயம் பாடப்பட வேண்டும் என்ற நடைமுறையும் அமலில் உள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி மாநிலப் பாடல் பாடப்படுவது தொடர்பாக கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 1970-களில் இருந்து அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் ’தமிழ்த்தாய் வாழ்த்து’ முதலில் பாடப்படுவது மரபாகவும், அரசாணைகளின் அடிப்படையிலும் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. ஆகவே, தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழ் மொழிக்கும், தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடாகும் என்பதை இப்பேரவை வெளிப்படுத்துகிறது.
இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏகமனதாக தீர்மானிக்கிறது.
இந்த தீர்மானத்தை அனைத்து கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களும் ஒற்றுமனதாக ஆதரித்து நிறைவேற்றித் தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, முதலமைச்சரின் தனித்தீர்மானத்தின் மீது அனைத்து கட்சிகளின் சார்பில் உரையாற்றப்பட்டது. அதன்படி, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேறியது. இதனை சட்டப்பேரவைக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.