📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 18, 2026 07:02 PM

'தமிழ்த்தாய் வாழ்த்து' முதலில் பாடுவதை யாரும் தடுக்கவில்லை

'தமிழ்த்தாய் வாழ்த்து' முதலில் பாடுவதை யாரும் தடுக்கவில்லை

'தமிழ்த்தாய் வாழ்த்து' முதலில் பாடுவதை யாரும் தடுக்கவில்லை - உயர்நீதிமன்றம்

சுதந்திர தினத்தன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், அதை தொடர்ந்து வந்தே மாதரம், தேசிய கீதம் பாடப்பட்டதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

Published : August 18, 2026 at 6:37 PM IST

சென்னை: மத்திய அரசின் புதிய அறிவிப்பின்படி, தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' முதலில் பாடுவதை யாரும் தடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளை தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தொடங்குவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், 'தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள், தமிழ்த்தாய் வாழ்த்து பாடி துவங்கப்படுவதும், தேசிய கீதம் இசைத்து நிறைவு செய்வதும் பல ஆண்டுகளாக மரபாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த நடைமுறையை நீர்த்துப் போக செய்யும் வகையில், அரசு நிகழ்ச்சியை வந்தே மாதரம் பாடியே தொடங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்துள்ளது. அரசு நிகழ்ச்சிகளில் வந்தேமாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்ட பிறகே, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது' என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், ‘வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வலியுறுத்தி, மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். எதிர்காலத்தில் அரசு நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கு தகுந்த நிர்வாக அறிவுறுத்தல்களை பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஆக.18) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசுத் தரப்பில், மத்திய உள்துறை அமைச்சகம் ஜூலை 9 ஆம் தேதி பிறப்பித்த புதிய அறிவிப்பாணைப்படி, வந்தேமாதரமும், தேசிய கீதமும் அடுத்தடுத்து பாடப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

முதலில் தேசிய பாடலான வந்தே மாதரமும், அதைத் தொடர்ந்து தேசிய கீதம் பாட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் மாநில பாடலை எப்போது பாட வேண்டும் என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதனால், மாநில பாடலை இறுதியில் தான் பாட வேண்டும் என கூறப்படவில்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டது.

இதையடுத்து, புதிய அறிவிப்பாணையில், தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதை யாரும் தடுக்கவில்லை. பின், வந்தே மாதரத்தை முதலிலும், தேசிய கீதத்தை இறுதியிலும் பாட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினர்.

தொடர்ந்து நீதிபதிகள், அதனடிப்படையில் தான், சுதந்திர தினத்தன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், அதைத் தொடர்ந்து வந்தே மாதரம், தேசிய கீதம் பாடப்பட்டதாகத் தெளிவுபடுத்தி, இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.