செருப்பை துடை... இல்லனா வெளியே போ.. பிக் பாஸ் ஆடிஷனில் பெண் போட்டியாளருக்கு நேர்ந்த அவமானம்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த 10 வருடமாக மக்கள் பார்த்து பார்த்து போடித்துப்போய்விட்டதால், இந்த நிகழ்ச்சியல் சுவாரசியத்தை கூட்ட வேண்டுமென டிவி நிர்வாகம் முடிவு செய்து, இந்த விளையாட்டில் பொதுமக்களும் விளையாடலாம் என அறிவித்ததை தொடர்ந்து ஏராளமான மககள் அதில் கலந்து கொள்ளவிண்ணப்பித்துள்ளனர். காமன் மேன் போட்டியாளர்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தெலுங்கு பிக் பாஸில் நடுவர் பிந்துமாதவி ஒரு பெண் போட்டியாளருக்கு செருப்பை சுத்தம் செய்யும் டாஸ்கை கொடுத்து அந்த பெண்ணை அவமானப்படுத்தி உள்ளார்.
பிக் பாஸ் அக்னிபரிட்சை: தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை போல தெலுங்கிலும் சாமானிய மக்கள் தேர்வு செய்யும் 'பிக் பாஸ் அக்னிபரிட்சை 2' தேர்வு போட்டி ஆகஸ்ட் 15 முதல் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான நடிகர் நவநீத் , நடிகை பிந்து மாதவி, மற்றும் நடிகர் அபிஜீத் துத்தாலா ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். இதில் கலந்து கொள்ள வந்த ஒரு ஆண் போட்டியாளர், நான் மிகவும் தைரியமானவன், எதையும் செய்யத் தயங்கமாட்டேன் என்று கூறினார். உடனே நடுவரான நவநீத், அப்படியானால் புஷ்அப்ஸ் எடு என்று சொல்லி அவரது முதுகில் 10 கிலோ எடையை வைத்தார். பின் அதை அதிகரித்து 40 கிலோ எடையாக உயர்த்தினார். அப்போதும் அந்த போட்டியாளர் அசராமல் புஷ்அப்ஸ் எடுத்ததை பார்த்துத் தொகுப்பாளர் ஸ்ரீமுகி வியந்து போனார்.
செருப்பை துடைங்க: அந்த போட்டியாளரைத் தொடர்ந்து ஒரு பெண் போட்டியாளர், பிசிக்கல் டாஸ்க்குகளில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக கடந்த 8 மாதங்களாக ஜிம்மிற்கு சென்று ஒர்க்அவுட் செய்கிறேன். கொஞ்சம் உடம்பையும் ஏற்றியிருக்கிறேன் என்று கூற, ஸ்ரீமுகியும் நவநீதும் அப்படி ரொம்ப நல்ல விஷயம் என்கின்றனர். ஆனால், நடிகை பிந்து மாதவி அந்தப் பெண் போட்டியாளரிடம், அங்கு இருக்கும் ஷூவை துடைத்து சுத்தம் செய்ய வேண்'டும் என டாஸ் கொடுக்கிறார். இதைக்கேட்ட அந்த பெண், அந்த வேலையை என்னால் செய்ய முடியாது, என்னை நானே அவமானப்படுத்தி கொள்வது போல ஆகும் என்கிறார்.
பிந்து மாதவி செருப்பை துடைத்தாரா? : உடனே நடுவர் அபிஜீத், எந்த வேலையும் கீழ்தனமான வேலை இல்லை என்று சொல்ல, அந்த பெண் அரைகுறை மனதுடன் ஒப்புக்கொண்ட ஷூவை அப்படியே தூக்கி தண்ணீர் பக்கெட்டிற்குள் முக்கி கழுவினார். இதைப் பார்த்த பிந்து மாதவி கோபமடைந்து, ஷூவை யாராவது தண்ணீரில் முக்குவார்களா? நீ இதை விளையாட்டாக எடுத்துக்கிட்ட என கூறி அவருக்கு 'ரெட் ஃபிளாக்' கொடுத்துவிட்டார். இதனால், அந்த பெண் கண்ணீருடன் அழுது கொண்டு நிற்பதை பார்த்த, அபிஜீத், உலகில் எந்த வேலையும் கேவலமானது கிடையாது என்று சொல்லிக்கொண்டு தனது இருக்கையில் இருந்து நடந்து சென்று அந்த பெண் போட்டியாளரின் காலை பிடித்து செருப்பை தனது கைகளால் துடைத்தார். உணர்ச்சிவசப்பட்ட அந்த பெண் போட்டியாளர் அழத்தொடங்கினார். இதில், அபிஜீத் செய்தது உணர்ச்சிப்பூர்வமாக இருந்தாலும், போட்டியாளர்களை செருப்பை சுத்தம் செய்ய சொல்வதும் மிகப்பெரிய தவறு, அதை செய்யவில்லை என்றதும் அவரை வெளியேற்றுவதும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. செருப்பை துடைப்பது தான் திறமையா? பிந்து மாதவி செருப்பை துடைத்துத்தான் இந்த இடத்திற்கு வந்தாரா? என இணையவாசிகள் கடுமையான கேள்விகளை கேட்டு வருகின்றனர்.