தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்; முதல்வர் முன்மொழிந்த தனித்தீர்மானம் நிறைவேற்றம்
சென்னை: தமிழ் என்றால் விருந்தோம்பல். சுருக்கமாக சொன்னால் தமிழ் என்றால் கெத்து, பவர்; தமிழை பின்னால் தள்ளினால் தமிழகம் சும்மா இருக்காது என முதல்வர் விஜய் பேசினார். அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று முதல்வர் முன்மொழிந்த தீர்மானம், சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
சனி, ஞாயிறு விடுமுறைக்கு பிறகு இன்று (ஆகஸ்ட் 10) தமிழக சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியது. அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்ற தனித்தீர்மானத்தை கொண்டு வந்து சட்டசபையில் முதல்வர் விஜய் பேசியதாவது: மொழி எப்பொழுதும் தொடர்புக்கான ஒன்று தான்; இல்லை என்று யாரும் மறுக்கவே முடியாது. உலகத்தில் இருக்கும் எல்லா மொழிக்கும் இது பொருந்தும்.
அதையும் யாரும் மறுக்க முடியாது. நமது தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல; பேசினால் வரும் ஓசை மட்டுமல்ல, நமது உயிர். அது நமது உணர்வு. நம்மை பெற்ற தாயை அம்மா என்று சொல்லும் போது எல்லாம் பாசமும், சொந்தமும் நம்மளை அறியாமலேயே உயிராக, உணர்வாக தானா உள்ளுக்குள்ளே தோன்றும். அதே மாதிரி, இன்னும் ஒரு படி மேலே போய் சொல்லலாம். தமிழ் என்று சொன்னாலே எப்படி இருக்கும் என்று சொல்லவா வேண்டும்.
அந்த பொட்டின் நறுமணம் உலகம் முழுவதும் பரவும் மாதிரி, தமிழின் புகழும் உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்றார். இன்றைக்கு தமிழ் பேசும் மக்கள் இல்லாத நாடுகள் குறைவு தான். தமிழும், தமிழனும் இல்லாத நாடு ஏது? தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல, பண்பாடு, நாகரிகம், சிந்தனை, அன்பு ஆகும்.
கெத்து, பவர்!
நமது ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பெயர் இருக்கும். ஒரு கூட்டத்தில் யாரும் பெயர் சொல்லி கூப்பிட்டால் நாம் ஒருவர் மட்டும் தான் திரும்பி பார்ப்போம். தமிழ், தமிழ் என்று சொன்னால் ஒட்டுமொத்தமாக நாம் எல்லோரும் திரும்பி பார்ப்போம்.
ஒன்றாக வந்து...
தமிழ் என்று சொன்னால் ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றாக வந்து நிற்கும். உலகில் தோன்றிய பல மொழிகள் காலப்போக்கில் மறைந்து போய் இருக்கிறது என்று சொல்வார்கள். நமது தமிழ் காலம் காலமாக நீடித்து நிற்கும் ஒன்று. தமிழ் என்றால் என்ன இல்லை. உலகம் முழுவதும் தெரிந்த திருக்குறள் ஒன்று போதாதா, தமிழின் பெருமையை சொல்வதற்கு?
1970 நவம்பர் 23 முதல் அரசு விழாக்களில் தமிழ் தாய் வாழ்த்தை முதலில் பாட வேண்டும் என்று அரசாணை போட்டு செயல்பாட்டுக்கு வந்தது. 2021ல் டிசம்பர் 17 முதல் மாநில பாடலாக அங்கீகாரம் வழங்கப்பட்டது. 2026ல் ஜனவரி 28ம் தேதி மத்திய அரசு சில நடைமுறைகளை வெளியிட்டது.
அதில் மாநில பாடல் குறித்து எந்த வழிமுறையும் இல்லை. நமது அரசு பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியிடம் மாநில பாடலுக்கு உரிய அங்கீகாரம் வேண்டும் என்றும், மாநில விழாக்களில் தமிழ்தாய் வாழ்த்து பாடுவதற்கான வழிமுறைகள் வேண்டும் என்று கடிதம் எழுதி இருந்தோம்.
சமரசம் செய்யாது
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன், தமிழ்தாய் வாழ்த்து முதலில் கட்டாயம் பாடப்பட வேண்டும்.
இந்த தீர்மானத்தை அனைத்து கட்சியை சார்ந்த உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றி தர வேண்டுகிறேன். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.வெவ்வேறு கட்சி தலைவர்களும் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினர். இதையடுத்து தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம்: சட்டசபையில் முதல்வர் விஜய் பரபரப்பு பேச்சு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்