📅 Thursday, 08 October 2026 IST | புரட்டாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 08, 2026 04:03 AM

தங்கம் வென்ற தடகள வீராங்கனை வித்யா ராமராஜ்.. நேரில் அழைத்துப் பாராட்டிய தனுஷ்!

தங்கம் வென்ற தடகள வீராங்கனை வித்யா ராமராஜ்.. நேரில் அழைத்துப் பாராட்டிய தனுஷ்!

சென்னை: ஆசிய விளையாட்டுப் போட்டியில் மூன்று பதக்கங்களை வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த தடகள வீராங்கனை வித்யா ராமராஜை, நடிகர் தனுஷ் அவர்கள் நேரில் சந்தித்து தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், வித்யா ராமராஜ் மகளிர் 4×400 மீட்டர் ரிலே பிரிவில் தங்கப் பதக்கமும், கலப்பு (Mixed) 4×400 மீட்டர் ரிலே பிரிவில் வெள்ளிப் பதக்கமும், மற்றும் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் வென்று வரலாற்று சாதனை படைத்தார்.

இவரது இந்தச் சாதனையைப் பாராட்டும் வகையில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கத்தின் (Chennai District Masters Athletic Association) தலைவரும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் (Red Giant Movies) நிறுவனத்தைச் சேர்ந்தவருமான திரு. M. செண்பகமூர்த்தி மற்றும் தடகள பயிற்சியாளர் நேபால் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.

பி.டி. உஷாவின் சாதனையை சமன் செய்த வித்யா ராமராஜ்

கோயம்புத்தூரைச் சேர்ந்த எளிய பின்னணி கொண்ட வித்யா ராமராஜ், ஆசிய விளையாட்டுப் போட்டியில் படைத்த சாதனைகள் மகத்தானவை. குறிப்பாக, மகளிர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தின் தகுதிச் சுற்றில் இவர் 55.42 வினாடிகளில் இலக்கை எட்டினார். இதன் மூலம், கடந்த 1984-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய தடகள ஜாம்பவான் பி.டி. உஷா படைத்திருந்த 39 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய சாதனையை வித்யா ராமராஜ் சமன் செய்து ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்தார். பல்வேறு பொருளாதார நெருக்கடிகளையும் சவால்களையும் கடந்து சர்வதேச தடகளப் பாதையில் முத்திரை பதித்துள்ள வித்யாவுக்கு நாடெங்கிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தனுஷ் நேரில் அழைத்து வாழ்த்து

நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளுடன் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் தனுஷ், கேப்டன் மில்லர், ராயன் படங்களுக்காக தேசிய விருது வென்றார். வரும் நவம்பர் 20ம் தேதி அவர் நடித்துள்ள ஓம் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இவ்வாறு அடுத்தடுத்த பிரம்மாண்ட திரைப்பட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையிலும், தமிழகத்தின் பெருமையாக விளங்கும் தடகள வீராங்கனை வித்யாவை நேரில் அழைத்து தனுஷ் பாராட்டியிருப்பது விளையாட்டு வட்டாரங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலை மட்டுமின்றி, விளையாட்டுத் துறையில் வளரும் இளம் திறமைகளையும் சாதனைகளையும் தொடர்ந்து அங்கீகரிப்பதில் தனுஷ் எப்போதும் முன்னிற்கிறார் என்பதற்கு இந்த சந்திப்பு மற்றுமொரு சான்றாக அமைந்துள்ளது.