தனியார் பள்ளி அனுமதி மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் உதவியாளரிடம் விசாரணை
தனியார் பள்ளி அனுமதி மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் உதவியாளரிடம் விசாரணை
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸிடம் 8 மணி நேரத்துக்கு மேலாக மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
Published : September 20, 2026 at 11:48 AM IST
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி பெற்று தருவதாக கூறி மோசடி நடைபெற்றதாக எழுந்த புகாரில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் உதவியாளர் அருண் பிரகாஷிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக இளங்கோவன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் பி.டி. அரசகுமார், சுரேஷ், ராஜா ஆகிய 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணையின்போது கிடைத்த தகவல்கள், ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 16ஆம் தேதி சென்னை, திருச்சி உட்பட அவருக்கும், அவருடன் தொடர்புடையவர்களுக்கும் சொந்தமான 9 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள், 18 செல்போன்கள், 3 மடிக்கணினிகள், 8 பென்டிரைவ்கள், ஹார்டு டிஸ்க் பொருத்தப்பட்ட 2 மேசைக் கணினிகள், ஒரு டேப்லெட் மற்றும் ஒரு ஆப்பிள் ஐபேட் உள்ளிட்ட மின்னணு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்களில் உள்ள தகவல்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து, இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி, நேற்று முன்தினம் (செப்.18) சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் அன்பில் மகேஸ் ஆஜரானார். அவரிடம் 8 மணி நேரத்துக்கு மேலாக மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் அவரிடம் 246 கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கான பதில்கள் பதிவு செய்யப்பட்டன. பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டங்கள் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை குறித்தும் விசாரணை நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கில் அன்பில் மகேஸின் உதவியாளராக இருந்த அருண் பிரகாஷ் என்பவரிம் நேற்று (செப்.19) மத்தியகுற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த திமுக ஆட்சி காலங்களில் அன்பில் மகேஷ் உதவியாளராக இருந்த அருண் பிரகாஷ் மூலமாகதான் பி.டி அரசகுமார் உள்ளிட்ட நபர்கள் தனியார் பள்ளி உரிமையாளர்களிடம் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட நிலையில் விசாரனை நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.