📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu June 05, 2026 06:00 PM

தனியார் பள்ளிகள் அதிகம் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை

தனியார் பள்ளிகள் அதிகம் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை

தனியார் பள்ளிகள் அதிகம் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் ராஜ்மோகன்

இரு மொழி கொள்கையில் இருந்து எப்போதும் மாற மாட்டோம், கல்வி நிதியை டெல்லி சென்று பேசி பெறுவோம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

Published : June 4, 2026 at 5:21 PM IST

சென்னை: மாணவர்களிடம் தனியார் பள்ளிகள் அதிகம் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை அரும்பாக்கம் சி.எம்.டி.ஏ குடியிருப்பு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் இன்று (ஜூன் 4) நடைபெற்ற முப்பெரும் விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் 2026 - 2027 ஆம் கல்வியாண்டின் தொடக்கமாக கல்வி உபகரணங்களான பாடப்புத்தகம், பேனா, பென்சில், பள்ளி சீருடை, பேக் ஆகிய அடங்கிய தொகுப்புகளை மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.

தொடர்ந்து, 21 டிஜிட்டல் திறன் பலகைகளை மாணவர் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தார். 10 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், 1,330 திருக்குளை ஒப்பித்த மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை மற்றும் பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்திப்பில் தனியார் பள்ளிகள் கட்டண விவரம் குறித்து பேசிய அவர், “தனியார் பள்ளிகள் தங்களது கட்டண விவரங்களை கண்டிப்பாகவும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். கடந்த கால ஆட்சியில் லஞ்ச லாவண்யங்கள் கொடுத்ததை சரி கட்டுவதற்காக தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்திருக்கலாம். முறைகேட்டில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மேலும், ”தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் அது குறித்து புகார் கொடுக்கலாம். இதற்கு முன்பு அப்படியான சூழல் இல்லாமல் இருந்தது. சிபிஎஸ்இ மாணவர்களும் எங்கள் மாணவர்கள் தான், சிபிஎஸ்இ குறித்து வரும் புகார்கள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.

தொடர்ந்து மடிக்கணிணிகள் காணாமல் போனதாக எழுத புகார் குறித்து பேசிய அவர், “அந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ”கல்வித் துறையில் எந்தெந்த பணியிடங்களை உடனே நிரப்ப முடியுமோ அதற்கு ஏற்ற வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த கால ஆட்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது பழி நோக்கத்தோடு போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும். கடந்த காலங்களை விட இந்த ஆண்டு இடைநிற்றல் மாணவர் சதவீதம் குறைந்துள்ளது” என்றார்.

பிஎம்ஸ்ரீ திட்டம் குறித்த கேள்விக்கு, “இருமொழி கொள்கையில் இருந்து எப்போதும் மாற மாட்டோம். இரு மொழி கொள்கையை காரணம் காட்டி நமது நிதியை நிறுத்தி வைத்தால், டெல்லி சென்று பேசி நிதியை வாங்குவோம். அனைவருக்கும் கல்வி, ஆரோக்கியமான கல்வி தான் தவெக அரசின் நோக்கம். மாணவர்களுக்கு செலவு செய்வதை முதலீடாக பார்க்க கூடாது” என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “ஆங்கிலேயர்கள் அவர்களது மொழியை உலக மொழி என்பார்கள், வடஇந்தியர்கள் அவர்களது மொழியை தேசிய மொழி என கூறிக் கொள்வார்கள். தமிழர்கள் தங்கள் மொழியை தாய் மொழி என கூறுவார்கள்.

புதிய கல்வி ஆண்டு உங்களுக்கு பிறந்துள்ளது. மாணவர்களை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. பள்ளிகளை திறக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்த ஆசிரியர்களுக்கு பாராட்டுகள். மாணவர்கள் அனைத்தையும் புரிந்து படிக்க வேண்டும். தெரியவில்லை என்றால் உங்களின் நண்பர்களிடம் கேட்டு படியுங்கள். முன்பெல்லாம் ஆசிரியர்களிடம் கோரிக்கை வைப்போம், இன்று மாணவர்கள் உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன். ஆசிரியர்களிடம் கோபப்படாமல் இருங்கள்.

நல்ல நண்பனை தேர்ந்தெடுத்து பழகினால், வாழ்க்கை சிறக்கும். உங்கள் ஆசிரியர்கள் தான் உங்களுடைய நண்பர்கள். அதே எண்ணத்துடன் நன்றாக அவர்களுடன் பழக வேண்டும்” என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.