📅 Wednesday, 30 September 2026 IST | புரட்டாசி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 30, 2026 08:00 PM

தன்னார்வ ரத்த தானத்தை ஊக்குவிக்க தமிழ்நாட்டில் புதிய நடவடிக்கைகள்..!

தன்னார்வ ரத்த தானத்தை ஊக்குவிக்க தமிழ்நாட்டில் புதிய நடவடிக்கைகள்..!

எனவே, 18 வயது முதல் 65 வயது வரை உள்ள ரத்த தானம் செய்யத் தகுதியுடைய அனைவரும் தன்னார்வமாக ரத்த தானம் செய்ய முன்வந்து உயிர்காக்கும் இந்த உன்னத சேவையில் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தேசிய தன்னார்வ ரத்த தான தினம்

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பிற ரத்த மையங்கள் மூலம் தன்னார்வ ரத்த தான முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. 2025–2026ஆம் ஆண்டில் 359 ரத்த மையங்கள் மூலம் 9,53,638 ரத்த அலகுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அரசு ரத்த மையங்கள் மூலம் 4,874 தன்னார்வ ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

சேகரிக்கப்படும் முழு ரத்தம் தேவைக்கேற்ப ரத்தக் கூறுகளாகப் பிரிக்கப்படுவதன் மூலம், ஒருவர் கொடுக்கும் கொடையிலிருந்து, பல நோயாளிகள் பயன்பெறுகிறார்கள். பிரிக்கப்பட்ட சிவப்பணுக்கள் 35 முதல் 42 நாட்கள் வரையும், பிளாஸ்மா கூறுகள் ஒரு ஆண்டு வரையும் உரிய முறையில் சேமித்து பயன்படுத்த முடியும். எனவே, ஒரு ரத்த தானம், பல கூறுகளாக பிரிக்கப்பட்டு, ஓர் ஆண்டு வரை பல உயிர்களைக் காக்கும் உன்னதமான மனிதநேயச் செயலாக அமைகிறது.

மூன்று புதிய அறிவிப்புகள்

1. தமிழ்நாடு அரியவகை ரத்தப் பிரிவு கொடையாளர் பதிவேடு (Tamil Nadu Rare Blood Donor Registry) உருவாக்குதல்.

2. மாவட்ட அளவில் ஆண்டு தன்னார்வ ரத்த தான முகாம் அட்டவணை (District Annual Voluntary Blood Donation Camp Schedule) உறுதிப்படுத்துதல்.

3. கல்லூரிகளில் ரத்தக் கொடையாளர் மன்றங்கள் (Blood Donor Clubs) உருவாக்குதல்.

இதன் மூலம் அரிய ரத்தப் பிரிவு கொண்ட நோயாளிகளுக்குத் தேவையான நேரத்தில் ரத்தம் கிடைப்பதும், மாநிலம் முழுவதும் தன்னார்வ ரத்த தான இயக்கம் ஒருங்கிணைக்கப்படுவதும் உறுதி செய்யப்படும்.

ரத்தம் கொடுப்போம்; உயிர்களைக் காப்போம்

மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 1 சதவிகித மக்களுக்கு தேவைப்படும் ரத்த அலகுகள் இருப்பை உறுதி செய்வதை இலக்காக கொண்டு, தன்னார்வ ரத்த தானத் திட்டங்களை வலுப்படுத்த, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

எனவே, 18 வயது முதல் 65 வயது வரை உள்ள ரத்த தானம் செய்யத் தகுதியுடைய அனைவரும் தன்னார்வமாக ரத்த தானம் செய்ய முன்வந்து உயிர்காக்கும் இந்த உன்னத சேவையில் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.