தனுஷ் அரசியலுக்கு வந்தால்.. நாம்தான் இழக்கப்போகிறோம்.. விஷால் ஓபன் டாக்
சென்னை: தனுஷ் கடந்த மாதத்தில் தனது 43வது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி திருவள்ளூரில் ரத்த தான முகாம் நடைபெற்றது. அதில் தனுஷ் கலந்துகொண்டு பேசியதிலிருந்து; அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று எல்லோருமே சொல்ல தொடங்கிவிட்டார்கள். அதுமட்டுமின்றி தனது ரசிகர் மன்றத்தை பலப்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டிருக்கிறார் அவர். இந்நிலையில் விஷால் பேசியது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் இப்போது ஓம் படத்தில் நடித்திருக்கிறார். அக்டோபர் மாதம் ரிலீஸ். சூழல் இப்படி இருக்க அவரது 43வது பிறந்தநாள் கடந்த மாதம் தமிழ்நாடு முழுவதும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. மேலுஜ்ம், தனுஷ் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக திருவள்ளூரில் ரத்த தான முகாமும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது. அதில் தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொண்டார்கள்.
தனுஷின் பேச்சு: அந்த விழாவில் பேசிய தனுஷ், "புதுப்பேட்டை, மயக்கம் என்ன, 3, வடசென்னை, கர்ணன் உள்ளிட்ட படங்களுக்கு எல்லாம் தேசிய விருது கொடுக்கவில்லை. அப்போது ஏன் கொடுக்கவில்லை என்று யாரும் கேட்கவில்லை. இப்போது கேட்கிறார்கள். தட்டிவிடாதீர்கள்; தட்டிக்கொடுங்கள். அஜித் சொல்வது மாதிரி,'நீயா தோத்துட்டன்னு ஒத்துக்கும் வரைக்கும் உன்னை யாரும் தோற்கடிக்க முடியாது. நாம் சும்மா ஆடியோ லான்ச்சில்,இதுபோன்ற விழாக்களில் சந்தித்தோம்; கலைந்தோம் என்று மட்டும் இருக்கக்கூடாது.
அந்தக் கூட்டம் நாம் இல்லை: இந்தக் கூட்டத்துக்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்பதை உணர்த்த வேண்டும். நம்மிடம் இருக்கும் பசங்க சும்மா இணையத்தில் நெகட்டிவிட்டியையும், அவதூறையும் பரப்பும் கூட்டம் இல்லை என்பதையும் காண்பிக்க வேண்டும்" என பேசினார். அவரது இந்தப் பேச்சை பார்த்த பலரும், தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் அதனால்தான் இப்படியெல்லாம் நரம்பு புடைக்க பேசுகிறார் என்ற கருத்துக்கள் எழுந்திருக்கின்றன.
தனுஷின் நடவடிக்கை: அதுமட்டுமின்றி ரஜினியால் முடியாததை தனுஷை வைத்து சாதிக்கப்பார்க்கிறார்கள் என்றெல்லாம் பேச்சுக்கள் வருகின்றன. இது ஒருபக்கம் இருக்க தன்னுடைய ரசிகர் மன்றத்தை பலப்படுத்தும் நோக்கத்தில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக உறுப்பினர் சேர்க்கையை நடத்த அவர் அறிவுறுத்தியிருப்பதாகவும், தமிழ்நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட மாவட்டங்களாக பிரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் ரசிகர் மன்ற நிர்வாகிகளின் குழந்தைகளுடைய படிப்பு செலவையும் சமீபத்தில் ஏற்றார்.
விஷால் சொல்வது: இப்படி தனுஷின் ஒவ்வொரு அடியும் அரசியலை நோக்கி இருப்பதாகவே கருதப்படுகிறது. இந்நிலையில் விஷாலிடம் தனுஷின் அரசியல் வருகை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், "அரசியல்வாதிகள் கூத்தாடித்தனம் செய்யும்போது கூத்தாடிகள் அரசியல் செய்வார்கள். தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என பலரும் சொல்லிவருகிறார்கள். அதுதான் அவரது நோக்கம் என்றால், அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். அரசியல் என்பது அனைவருக்குமான களம். யார் வேண்டுமானாலும் அதில் நுழையலாம். அவர் ஒரு சிறந்த நடிகர், இயக்குநர். இன்னொரு நல்ல நடிகரையும், திறமையான கலைஞரையும் நாம் இழக்கப்போகிறோம்" என்றார்.