📅 Tuesday, 17 November 2026 IST | கார்த்திகை 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 21, 2026 09:04 AM

தனுஷை தொடர்ந்து சிம்புவும் அரசியலுக்கு வருகிறாரா?.. அடேங்கப்பா என்ன சொல்லியிருக்காரு பாருங்க!

தனுஷை தொடர்ந்து சிம்புவும் அரசியலுக்கு வருகிறாரா?.. அடேங்கப்பா என்ன சொல்லியிருக்காரு பாருங்க!

சென்னை: தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமின்றி, பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையுடன் வலம் வருபவர் சிம்பு. அரசியல் குறித்து அவ்வப்போது தனது கருத்துகளை வெளிப்படுத்தி வந்தாலும், நேரடியாக அரசியலில் களமிறங்குவது குறித்து இதுவரை எந்த முடிவையும் அவர் அறிவிக்கவில்லை. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் அரசியல் வருகை, தனது தந்தை டி. ராஜேந்தரின் அரசியல் பயணம் மற்றும் முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி குறித்து சிம்பு பேசியிருக்கும் விஷயங்கள் கவனம் பெற்றுள்ளன.

அந்த பேட்டியில் சிம்புவிடம் அரசியலில் தனக்கு ஆர்வம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தனக்கு தற்போது அரசியலில் பெரிய அளவில் ஈடுபாடு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

சிம்பு கூறியதாவது, "நான் பெருசா அரசியல் எல்லாம் எடுத்துக்க மாட்டேன். எங்க அப்பா கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட்டபோது அவர் சந்தித்த சிக்கல்கள், இடையூறுகள் என எல்லாத்தையும் நான் கண்ணால் பார்த்திருக்கிறேன். அதனால் எனக்கு அரசியல் மீது பெரிய அளவில் ஈடுபாடு கிடையாது.

எங்க அப்பா என்னைவிட ரொம்ப டெடிகேட்டான ஒரு மனுஷன். சினிமாவாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி, மற்ற பொதுவான விஷயங்களாக இருந்தாலும் சரி, என்னைவிட அவர் ரொம்ப சிறப்பானவர், சிறந்த ஒரு நபர்," என்று சிம்பு தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் என்ன நடக்கும்னு தெரியாது: அரசியலுக்கு எதிர்காலத்தில் வருவீர்களா என்று சிம்புவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, தற்போது அதற்கான எந்த எண்ணமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இப்போதைக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்ற எந்த ஐடியாவும் எனக்கு இல்லை. ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியும்? இப்போதைக்கு அரசியல் தொடர்பான எந்த எண்ணமும் கிடையாது," என்று சிம்பு கூறியுள்ளார்.

விஜய் ஆட்சி எப்படி இருக்கு?: இதையடுத்து, நடிகர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்று 100 நாட்களை நிறைவு செய்திருக்கும் நிலையில், அவருடைய ஆட்சி எப்படி இருக்கிறது என்று சிம்புவிடம் கேட்கப்பட்டது. அதற்கு, "அதைப் பற்றி எனக்கு பெருசா தெரியாது. 100 நாட்களிலேயே ஒருவருடைய ஆட்சி எப்படி இருக்கிறது என்று மதிப்பிடுவது ரொம்ப அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வருவது மாதிரி இருக்கும். அது ரொம்ப முன்கூட்டியான மதிப்பீடு. அவருக்கு இன்னும் கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும். அவர் நல்லாதான் பண்ணிட்டிருக்காரு என்று நான் நினைக்கிறேன்," என்று சிம்பு தெரிவித்துள்ளார்.

2031-ல் கட்சி ஆரம்பிப்பாரா?: தொடர்ந்து, 2031-ம் ஆண்டு சிம்பு சொந்தமாக கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்திப்பாரா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கும் தனக்கு அப்படியொரு எண்ணம் இல்லை என்று சிம்பு தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், தொடர்ந்து இப்படிப்பட்ட கேள்விகளை கேட்டு வந்தால், தங்களையே கட்சி ஆரம்பிக்க வைத்துவிடுவீர்கள் போலிருக்கிறது என்று சிரித்தபடியே பதிலளித்த சிம்பு, "அண்ணா விஜயே ரொம்ப நல்லாதான் பண்ணிட்டிருக்காரு. அவரே பண்ணட்டும்," என்று கூறியுள்ளார்.

விஜய்க்கு ஆதரவாக வருவாரா?: இதையடுத்து, விஜய்க்கு ஆதரவாக அரசியலில் சிம்பு வரலாமே என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உடனடியாக எந்த உறுதியான பதிலையும் அளிக்காத சிம்பு, "அடுத்து என்ன நடக்கும்னு தெரியல.. பார்க்கலாம். அதையும் எதிர்கொள்வோம்," என்ற வகையில் பதிலளித்துள்ளார்.

இதனால், சிம்பு தற்போது அரசியலுக்கு வருவதற்கான எந்த திட்டமும் இல்லை என்று தெளிவுபடுத்தியிருந்தாலும், எதிர்காலம் குறித்து கதவை முழுமையாக மூடவில்லை என்பது மட்டும் அவரது பேச்சில் தெரிகிறது. அதேநேரத்தில், முதலமைச்சர் விஜய்க்கு இன்னும் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும், அவர் நல்ல முறையில் செயல்பட்டு வருவதாக தான் நினைப்பதாகவும் சிம்பு கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே தனுஷ் அரசியலில் களமிறங்கவுள்ளார் என்று தகவல் உலா வரும் நிலையில் சிம்பு இவ்வாறு தெரிவித்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.