📅 Sunday, 29 November 2026 IST | கார்த்திகை 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics November 29, 2026 06:00 PM

தொகுதி மறுவரையறை விவகாரம்: மு.க.ஸ்டாலினை சந்திக்க சோனியா, ராகுல், மம்தா சென்னை வருகை

தொகுதி மறுவரையறை விவகாரம்: மு.க.ஸ்டாலினை சந்திக்க சோனியா, ராகுல், மம்தா சென்னை வருகை

திமுக தலைவர் மு.க ஸ்டாலின்

புது டெல்லி: தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க ஆதரவு கேட்பதற்காக இண்டியா கூட்டணியின் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வருகின்றனர்.

இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இண்டியா கூட்டணியின் மூத்த தலைவர்களும் நானும் மு.க.ஸ்டாலினை சந்திக்க சென்னை செல்கிறோம். தொகுதி மறுவரையறை அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களை எதிர்க்குமாறு அவரையும் திமுகவையும் கேட்டுக்கொள்வோம்.

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 850 இடங்களாக மாற்றுவது இந்தியாவில் ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டுவரும். இது, தங்களுக்குச் சாதகமாக இந்தியாவின் ஒட்டுமொத்த தேர்தல் வரைபடத்தையும் மாற்றி அமைக்க பாஜக-ஆர்எஸ்எஸ்-க்கு வரம்பற்ற வாய்ப்பை வழங்கும்.

சகோதரர் ஸ்டாலின், தமிழர்களுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக எப்போதுமே ஒரு பாறை போல உறுதியாக நின்றிருக்கிறார். தேசிய நலனுக்காகவும், தமிழக நலனுக்காகவும், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த மசோதாவைத் தோற்கடிக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளித்துள்ளது. சென்னையில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற அதன் எம்.பி.க்கள் கூட்டத்திற்குப் பிறகு, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்தது. திமுகவுக்கு 22 மக்களவை உறுப்பினர்களும், ராஜ்யசபாவில் 8 எம்.பி.க்களும் உள்ளனர்.

இதனை அடுத்து டெல்லி கிருஷ்ண மேனன் சாலை​யில் உள்ள மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவின் இல்​லத்துக்கு நேற்று திமுக எம்.பி.க்​கள் கனி​மொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், வில்சன் ஆகியோர் சென்றனர். அங்கு அமித் ஷாவைச் சந்தித்து திமுக.வின் ஆதரவை தெரிவித்தனர்.

பின்னர் கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொகுதி மறுவரையறையால் வரக்கூடிய பிரச்சினைகள் தொடர்பாக யாரும் பேசாத கால கட்டத்திலேயே, ‘இருக்கக் கூடிய எண்ணிக்கையைக் கூட்ட வேண்டிய அவசியம் இல்லை. அப்படி உயர்த்தினால் 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கொண்டுவர வேண்டும். தமிழகம் பாதிக்கப்பட கூடாது’ என முதல்முதலாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது திமுகதான்.

அதைத் தொடர்ந்து இந்தியாவில் பல்வேறு கட்சி தலைவர்களையும், 5 முதல்வர்களையும் அழைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாநாடு நடத்தினார். அதிலும் மிக தெளிவாக தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று அவர் சொல்லவில்லை. நியாயமான தொகுதி மறுவரையறைதான் வேண்டும் என்றார். ஆனால், கடந்த முறை 2011-ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மசோதா கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன், 50 சதவீதம் உயர்வுக்கான தகவல்கள் மசோதாவில் இடம்பெறவில்லை. இதனால் தமிழக மக்களவையின் எண்ணிக்கை 39-ல் இருந்து 32 ஆக குறைந்திருக்கும்.

அப்போது அதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தோம். இப்போது, திமுக வைத்த கருத்துகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 50 சதவீதம் எண்ணிக்கையை உயர்த்தி தருகிறோம் என்கிற மசோதாவை கொண்டு வருகின்றனர். இதன்மூலம் 59 எம்.பி.க்கள் தமிழகத்துக்கு கிடைப்பார்கள். இவ்வாறு அனைத்து மாநிலங்களின் உரிமைகளையும் பெற்று தந்திருக்க கூடிய மகிழ்ச்சியோடு இந்த மசோதாவை திமுக ஆதரித்திருக்கிறது. என்றார்.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவளித்தது பெரும் சலசலப்பை உருவாக்கி உள்ளது. இதனையடுத்து, நேற்று இண்டியா கூட்டணி தலைவர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். இதில் ராகுல் காந்தி, அபிஷேக் பானர்ஜி, பிரியங்கா காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த சூழலில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி இண்டியா கூட்டணி தலைவர்கள் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்.

தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு ஆகிய இரண்டு முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசாங்கம் தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்காக நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை நாடாளுமன்றம் சிறப்பு அமர்வு கூடுகிறது. மக்களவை நாளையும் (திங்கள்கிழமை), மாநிலங்களவை டிசம்பர் 2 புதன்கிழமை அன்றும் கூடுகிறது.

திங்கள்கிழமை மக்களவையில் அரசியலமைப்பு (132வது திருத்தம்) மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை (இரண்டாவது) மசோதா ஆகியவற்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தும். மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இரண்டு மசோதாக்களையும் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியலமைப்பு திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும் மற்றும் மாநில சட்டமன்றங்களில் குறைந்தது பாதியளவு ஒப்புதல் பெற வேண்டும்.