📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports July 16, 2026 02:34 AM

தொடரை வெல்ல இந்தியா 'ரெடி': இங்கிலாந்துடன் 2வது சவால்

தொடரை வெல்ல இந்தியா 'ரெடி': இங்கிலாந்துடன் 2வது சவால்

கார்டிப்: இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அசத்தினால், தொடரை எளிதில் கைப்பற்றலாம்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் சவாலில் வென்ற இந்தியா, 1-0 என முன்னிலையில் உள்ளது. இன்று கார்டிப், சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் இரண்டாவது போட்டி நடக்க உள்ளது.

தடுமாறும் ரோகித்: இந்திய அணிக்கு துவக்கத்தில் 'சீனியர்' ரோகித் சர்மா, 39, ஏமாற்றுகிறார். முதல் போட்டியில் 11 ரன் தான் எடுத்தார். கேப்டன் பதவி பறிக்கப்பட்ட பின், இவரிடம் பழைய 'ஹிட்மேன்' ஆட்டத்தை காண முடியவில்லை. 2025, அக்டோபரில் இருந்து விளையாடிய 13 ஒருநாள் போட்டிகளில் ஒரு சதம், 4 அரைசதம் உட்பட 563 ரன் (சராசரி 46.91) மட்டுமே எடுத்துள்ளார். 2027 ல் நடக்க உள்ள உலக கோப்பை தொடரில் (50 ஓவர்) இடம் பிடிக்க விரும்பினால், மீண்டும் அதிரடியாக ஆட வேண்டும். மற்றொரு அனுபவ வீரர் கோலி, 37, நல்ல உடற்தகுதியுடன் உள்ளார். 2025, அக்.1ல் இருந்து பங்கேற்ற 10 ஒருநாள் போட்டிகளில் தலா 3 சதம், அரைசதம் உட்பட 621 ரன் (சராசரி 77.62) எடுத்துள்ளார்.

சுப்மன் காயம் எப்படி: கடந்த போட்டியில் 80 ரன் விளாசிய கேப்டன் சுப்மன் கில், வலது கால் தசை பிடிப்பு காரணமாக வெளியேறினார். காயத்தில் இருந்து மீண்டு, இன்று களமிறங்க தயாராக உள்ளார். ஷ்ரேயஸ் ஐயர், ராகுல், ஷிவம் துபே கைகொடுக்க வேண்டும்.

வருவாரா அர்ஷ்தீப்: சுமார் 3 ஆண்டுகளுக்கு பின் ஒருநாள் போட்டியில் பங்கேற்ற 'வேகப்புயல்' பும்ரா, கடந்த போட்டியில் அசத்தினார். சோபியா கார்டன்ஸ் மைதான ஆடுகளத்தில் பந்துகள் நன்கு 'பவுன்ஸ்' ஆகும். இதனால் குர்னுார் பிரார் நீக்கப்பட்டு, அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்படலாம். முதல் போட்டியில் 'ஸ்பின்' ஆல்-ரவுண்டர்கள் வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் அசத்தினர். இதனால் குல்தீப் யாதவ் இடம் பெற வாய்ப்பு குறைவு.

ஜோ ரூட் நம்பிக்கை: இங்கிலாந்து அணிக்கு கடந்த போட்டியில் டக்கெட் நல்ல துவக்கம் கொடுத்தார். மற்ற 'டாப்-ஆர்டர்' பேட்டர்கள் ஏமாற்றினர். இதன் காரணமாகவே, 2025ல் இருந்து இங்கிலாந்து பங்கேற்ற 19 ஒருநாள் போட்டிகளில் 13ல் தோல்வி அடைந்துள்ளது.

இருப்பினும் கார்டிப் மைதானத்தில் விளையாடிய 17 போட்டிகளில் 10ல் வென்றிருப்பது, கேப்டன் ஹாரி புரூக்கிற்கு நம்பிக்கை தரலாம். புதிதாக பிரைடன் கார்ஸ் சேர்க்கப்பட்டிருப்பது பலம். அனுபவ ஜோ ரூட், பட்லர், டாசன், ஜாக்ஸ் மீண்டும் தொல்லை கொடுக்கலாம். பந்துவீச்சில் மிரட்ட ஜோப்ரா ஆர்ச்சர், ஜோஷ் டங், சாம் கர்ரான், 'ஸ்பின்னர்' அடில் ரஷித் உள்ளனர்.

யார் ஆதிக்கம்

இரு அணிகளும் 111 ஒருநாள் போட்டிகளில் மோதின. இந்தியா 62, இங்கிலாந்து 44ல் வென்றன. 2 போட்டி 'டை' ஆனது. 3 போட்டிக்கு முடிவு இல்லை.

* சோபியா கார்டன்ஸ் ஆடுகளம் 'வேகங்களுக்கு' சாதகமானது. பேட்டர்களும் சாதிக்கலாம்.

* மழைக்கு வாய்ப்பு இல்லை.