📅 Thursday, 30 July 2026 IST | ஆடி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 30, 2026 02:33 AM

தபால் கட்டணம் வரும் 1 ஆம் தேதி முதல் உயர்வு: எவ்வளவு கூடுகிறது?

தபால் கட்டணம் வரும் 1 ஆம் தேதி முதல் உயர்வு: எவ்வளவு கூடுகிறது?

இந்திய தபால் துறை, விரைவு தபால் சேவைகளுக்கான புதிய கட்டணங்களை அறிவித்துள்ளது. மேலும், முதல் முறையாக 'ஆவணம்' மற்றும் 'பார்சல்' ஆகியவற்றுக்கு தெளிவான வரையறைகளையும் வெளியிட்டு உள்ளது. இந்த புதிய கட்டணங்கள் வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இந்த புதிய விதிகளின்படி, மறுவிற்பனை மதிப்பு இல்லாத கடிதங்கள் மற்றும் அச்சிடப்பட்ட ஆவணங்கள் குறைந்த கட்டணத்தில் அனுப்பப்படலாம். வணிகப்பொருட்கள் மற்றும் மறுவிற்பனை செய்யக்கூடிய பொருட்கள் அனைத்தும் பார்சல் பிரிவில் சேர்க்கப்படும்.

வங்கி பாஸ்புத்தகம், காசோலை புத்தகம், வங்கி கணக்கு அறிக்கை. பான் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் உள்ளிட்ட ஆவணங்கள் “ஆவணம்" பிரிவில் இடம்பெறும். அதேபோல், 500 கிராம் வரை எடையுள்ள ராக்கி உறைகள், வாழ்த்து அட்டைகள் மற்றும் வணிக மதிப்பு இல்லாத அச்சிடப்பட்ட பொருட்களும் இந்த பிரிவில் சேர்க்கப்படும். இதற்கு அப்பாற்பட்ட அனைத்து பொருட்களும் பார்சல் பிரிவில் வகைப்படுத்தப்படும்.

பொதுமக்கள் மற்றும் மொத்த வாடிக்கையாளர்களுக்காக '24 விரைவு தபால்' மூலம் அனுப்பப்படும் பொருட்கள் 24 மணி நேரத்துக்குள் வழங்கப்படும். '48 விரைவு தபால்' மூலம் அனுப்பப்படும் பொருட்கள் 48 மணி நேரத்துக்குள் வழங்கப்படும்.

இந்த சேவைகள் தற்போது டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய 6 நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றன.24 மணி நேர விரைவு தபால் சேவையில், பொதுமக்களுக்கான கட்டணம் பொருளின் எடை மற்றும் தூரத்தை பொறுத்து ரூ.38 முதல் ரூ.186 வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 50 கிராமுக்கும் குறைவான பொருளை உள்ளூர் முகவரிக்கு அனுப்ப ரூ.38, இந்தியாவின் பிற பகுதிகளுக்கு அனுப்ப ரூ.94 வசூலிக்கப்படும். 48 மணி நேர விரைவு தபால் சேவைக்கான கட்டணம் பொதுமக்களுக்கு ரூ.61 முதல் ரூ.121 வரை இருக்கும். மொத்த வாடிக்கையாளர்களுக்கு 24 மணி நேர சேவைக்கான கட்டணம் ரூ.38 முதல் ரூ.100 வரையும், 48 மணி நேர சேவைக்கான கட்டணம் ரூ.48 முதல் ரூ.72 வரையும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய நடைமுறையால் ஆவணங்கள் மற்றும் பார்சல்களை தனித்தனியாக வகைப்படுத்தி, அதற்கேற்ற கட்டணத்தில் அனுப்பும் வசதி கிடைக்கும் என்று தபால் துறை தெரிவித்துள்ளது.