📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 04, 2026 07:00 PM

தப்பியோடிய 274 குற்றவாளிகள் இந்தியா அழைத்து வரப்பட்டனர்: மத்திய அரசு

தப்பியோடிய 274 குற்றவாளிகள் இந்தியா அழைத்து வரப்பட்டனர்: மத்திய அரசு

புதுடெல்லி: கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து தப்பியோடிய 274 பேர் 36 நாடுகளில் இருந்து மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், தப்பியோடிய குற்றவாளிகளுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தீர்க்கமான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும் கடந்த 2019 முதல் 2026 வரை 274 தப்பியோடிய குற்றவாளிகள் 36 நாடுகளில் இருந்து இந்தியா அழைத்து வரப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தப்பி ஓடியவர்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த, உளவுத்துறை அடிப்படையிலான, தொழில்நுட்பம் சார்ந்த செயல்திட்டத்தை இந்தியா உருவாக்கியுள்ளது. இது அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வழி வகுத்து அவர்கள் இந்தியா திரும்புவதை எளிதாக்குகிறது.

“குற்றவாளிகள் தப்பி ஒடுவது என்பது, நாட்டின் இறையாண்மை, பொருளியல் நிலைத்தன்மை, சட்டம்-ஒழுங்கு, தேசியப் பாதுகாப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது. இதைக் கருத்தில் கொண்டே, நாடு கடத்தல் கட்டமைப்பை வலுப்படுத்த அரசாங்கம் தொடர்ச்சியான சட்ட விதிகளை அறிமுகப்படுத்தியது.

“மோடி அரசாங்கத்தின்கீழ், இன்டர்போல் ‘ரெட் கார்னர்’ எச்சரிக்கை வழங்குவது அதிகரித்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் 401 தப்பியோடிய குற்றவாளிகளுக்கு எதிராக அந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

“மோடி அரசாங்கம், 2019ல் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) திருத்தச் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு திருத்தச் சட்டத்தை இயற்றியது. மேலும், பணமோசடி தடுப்புச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்தியால் 2019 முதல் 2026 வரை தப்பியோடிய குற்றவாளிகளின் ரூ.17,874 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

“2019 முதல் 2026 வரை நாட்டை விட்டு வெளியேறிய பொருளியல் குற்றவாளிகளிடமிருந்து நிதி உட்பட ரூ.18,762 கோடி வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது,” என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.