📅 Tuesday, 25 August 2026 IST | ஆவணி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 25, 2026 04:04 PM

தரமான, திறன்வாய்ந்த அரசாங்கம் வெற்றிகரமான நாட்டைத் தனியாகக் காட்டும்: சான் சுன் சிங்

தரமான, திறன்வாய்ந்த அரசாங்கம் வெற்றிகரமான நாட்டைத் தனியாகக் காட்டும்: சான் சுன் சிங்

வலுவிழந்துவரும் விதிமுறைகளின் அடிப்படையிலான அனைத்துலக ஒழுங்குமுறை, அதிகரித்துவரும் புவிசார் அரசியல் போட்டித்தன்மை ஆகியவற்றுக்கு மத்தியில் தரமான, திறன்வாய்ந்த அரசாங்கம் வெற்றிகரமான நாட்டைப் பிற நாடுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் என்று பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் சான் சுங் சிங் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் மரினா பேயில் நடைபெற்ற முதல் சிங்கப்பூர் - வியட்னாம் உத்திபூர்வ கலந்துரையாடலில் பேசிய அவர், வலுவான அரசாங்கங்கள் மாற்றங்களை முன்கூட்டியே அடையாளம் காணவும் வெளிப்புற அதிர்ச்சிகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிகொள்ளவும் உதவும் என்றார்.

“பொருளியல் போட்டித்தன்மையைப் பொருத்தவரை கொள்கைகளில் நிலைத்தன்மை, ஒழுங்குமுறையான செயல்பாடுகள், பொதுச் சேவைகளின் தரம் ஆகியவை முக்கியம். எங்கு முதலீடு செய்யவேண்டும், நீண்டகாலத்துக்கு வர்த்தகத்தை எங்கு உருவாக்கவேண்டும் என்பதை முடிவுசெய்ய வர்த்தகங்கள் இத்தகைய அம்சங்களைக் கவனத்தில்கொள்ளும்,” என்று திரு சான் விவரித்தார்.

அரசாங்கங்களுக்கும் நாட்டு மக்களின் நம்பிக்கையும் நன்மதிப்பும் தேவை என்ற அவர், மக்களின் நம்பிக்கை இருந்தால் மட்டுமே அரசாங்கங்களால் ஒருமித்த கருத்தை உருவாக்கவும் சமுதாயத்தை ஒருங்கிணைக்கவும் பல ஆண்டுகளுக்குப் பிறகே நன்மைகள் கிடைக்கக்கூடிய கடினமான சீர்திருத்தங்களையும் மேற்கொள்ள முடியும் என்றார்.

வியட்னாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியச் செயற்குழுச் செயலகத்தின் நிரந்தர உறுப்பினரான டிரான் காம் துவுடன் சேர்ந்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உரையாடலுக்குத் திரு சான் தலைமை தாங்கினார்.

2027ஆம் ஆண்டிலிருந்து 2029ஆம் ஆண்டுவரை வியட்னாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த அதிகாரிகளுக்கான ஆய்வுப் பயணத் திட்டம், உயர் நிர்வாகக் கல்வித் திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் கையெழுத்திட்டனர்.

வியட்நாம் - சிங்கப்பூர்த் தொழில்நுட்ப இணைப்பு உத்திபூர்வ உடன்பாடு குறித்த கூட்டறிக்கை ஒன்றை இரு நாடுகளும் வெளியிட்டன.

கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் செய்துகொண்ட விரிவான உத்திபூர்வ பங்காளித்துவத்தின்கீழ் சிங்கப்பூர் - வியட்நாம் உத்திபூர்வக் கலந்துரையாடல் நிறுவப்பட்டது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

“வளர்ந்துவரும் சவால்கள் குறித்துத் திறந்த மனத்துடன் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டு இருதரப்பிலும் வட்டார ரீதியிலும் ஒருங்கிணைந்து வேலை செய்வதற்கான அம்சங்களைக் கண்டறியவும் தளமாக இது அமைவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என்றார் சான்.

சிங்கப்பூருக்கும் வியட்னாமுக்கும் இடையில் அதிகரித்துவரும் வலுவான அரசியல் நம்பிக்கையையும் இருதரப்பு உறவின் முக்கியத்துவத்தையும் உத்திபூர்வ கலந்துரையாடல் பிரதிபலிப்பதாக திரு து, தமது தொடக்க உரையில் கூறினார்.