துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி 45 பேர் பாதிப்பு; 21 இடங்களில் உணவு மாதிரிகள் ஆய்வு
ஆவடி: ஆவடி மாநகராட்சியில் துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி கிடந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த உணவை சாப்பிட்ட 45க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், நான்கு பேர் உள்நோயாளிகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆவடி மாநகராட்சியில் 1,145 துாய்மை பணியாளர்களுக்கு, கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான ஒப்பந்தம், ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ ஹரி என்பவரின் ‘சரோஜா கேட்டரர்ஸ்’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு, ஆவடி சின்னம்மன் கோவில் அருகே பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள மாநகராட்சி இடத்தில் மொத்தமாக உணவு சமைக்கின்றனர். இந்நிலையில், பருத்திப்பட்டு பசுமை பூங்காவில் நேற்று காலை 9:30 மணி அளவில் வழக்கம் போல் 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்ட போது, சாம்பாரில் பல்லி செத்து கிடந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, மற்ற இடங்களில் உணவு விநியோகம் நிறுத்தப்பட்டது.
உணவை சாப்பிட்ட சிலருக்கு வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட்டதால், ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வசந்தா, 50, எமிலி, 50, விஜயலட்சுமி, 40, குமார், 41, ஆகிய நான்கு பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 45-க்கும் மேற்பட்டோருக்கு முதலுதவி மற்றும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சம்பவம் குறித்து தகவல் பரவியதால், அச்சமடைந்த 300-க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். மேயர் உதயகுமார், மாநகராட்சி கமிஷனர் சரண்யா, எம்.எல்.ஏ., ரமேஷ் குமார் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று பணியாளர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
கமிஷனர் சரண்யா கூறுகையில், “21 இடங்களில் வழங்கப்பட்ட உணவின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வில் குறைபாடு உறுதியானால், சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உள்நோயாளியாக சிகிச்சை பெறும் நான்கு பணியாளர்களும் நலமாக உள்ளனர்,” என்றார்.
உயிருக்கு யார் பொறுப்பேற்பர்? துாய்மை பணியாளர்கள் கூறியதாவது: சாம்பாரில் பல்லி விழுந்தது தெரியாமல் சாப்பிட்டோம். பாதி உணவு சாப்பிட்ட பிறகே மேற்பார்வையாளர் சாப்பிட வேண்டாம் என்றார். அதன்பின் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், அனைவரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தினமும் வழங்கப்படும் உணவு தரமற்றதாக உள்ளது. அதில் புழு உள்ளிட்ட அசுத்தங்கள் இருப்பதை பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. உணவு முறையாக வேகவைப்பதில்லை; அழுகிய காய்கறிகளிலேயே சமைக்கின்றனர். காலையுணவை நம்பித்தான் வேலைக்கு வருகிறோம். ‘பல்லி தானே, ஊசி போட்டுள்ளோம்; ஒன்றும் ஆகாது’ என டாக்டர்கள் கூறுகின்றனர். எங்கள் உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பர்? எங்களுக்கு பாதுகாப்பே இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.