📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 09, 2026 08:03 PM

துலீப் கோப்பை வரலாற்றில் மாபெரும் சாதனை.. ஒரே ஆட்டத்தில் 350 ரன்கள் குவித்து அசத்தல்

துலீப் கோப்பை வரலாற்றில் மாபெரும் சாதனை.. ஒரே ஆட்டத்தில் 350 ரன்கள் குவித்து அசத்தல்

துலீப் கோப்பை வரலாற்றில் மாபெரும் சாதனை.. ஒரே ஆட்டத்தில் 350 ரன்கள் குவித்து அசத்தல்

சென்னை: ஈஸ்ட் ஜோன் அணிக்காக விளையாடி வரும் இஷான் கிஷன், துலீப் டிராபி கிரிக்கெட் தொடரில் புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சவுத் ஜோன் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 2026 துலீப் டிராபி இறுதிப்போட்டியில், ஈஸ்ட் ஜோன் அணியின் கேப்டனாக விளையாடி வரும் இஷான் கிஷன் முதல் இன்னிங்ஸில் 270 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 98 பந்துகளில் 80 ரன்களும் குவித்து அசத்தினார்.

இதன் மூலம், துலீப் டிராபி வரலாற்றில் ஒரு விக்கெட் கீப்பராக அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் எடுத்த வீரர் என்ற சாதனையை ஏற்கனவே படைத்திருந்த இஷான் கிஷன், ஆட்டத்தின் 4-ம் நாளில் மற்றொரு இமாலய சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளார். துலீப் டிராபி வரலாற்றிலேயே ஒரே போட்டியில் இரு இன்னிங்ஸ்களையும் சேர்த்து அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை அவர் தற்போது படைத்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இடதுகை பேட்ஸ்மேனான இஷான் கிஷன், இந்த இறுதிப்போட்டியில் ஒட்டுமொத்தமாக 350 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் 1987-ம் ஆண்டு ராமன் லம்பா படைத்திருந்த சாதனையை அவர் முறியடித்துள்ளார். 1987 துலீப் டிராபி இறுதிப்போட்டியில் வெஸ்ட் ஜோன் அணிக்கு எதிராக நார்த் ஜோன் அணிக்காக விளையாடிய ராமன் லம்பா 320 ரன்கள் குவித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. லம்பா தனது முதல் இன்னிங்ஸிலேயே 320 ரன்கள் எடுத்திருந்தார், இரண்டாவது இன்னிங்ஸில் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.

துலீப் டிராபி வரலாற்றில் ஒரே போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இஷான் கிஷன் தற்போது 350 ரன்களுடன் (270 மற்றும் 80 ரன்கள்) முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக, 1987-ல் வெஸ்ட் ஜோனுக்கு எதிரான போட்டியில் நார்த் ஜோன் வீரர் ராமன் லம்பா விளாசிய 320 ரன்கள் இரண்டாவது இடத்தில் உள்ளது. 2001-ம் ஆண்டு சவுத் ஜோன் அணிக்கு எதிரான போட்டியில் சென்ட்ரல் ஜோன் வீரர் ககன் கோடா குவித்த 300 ரன்கள் இப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இவர்களைத் தொடர்ந்து, 1987-ல் சென்ட்ரல் ஜோனுக்கு எதிராக வெஸ்ட் ஜோன் வீரர் லால்சந்த் ராஜ்புத் 298 ரன்களுடனும் (232 மற்றும் 75 ரன்கள்), 1999-ல் சவுத் ஜோன் அணிக்கு எதிராக நார்த் ஜோனின் வீரேந்தர் சேவாக் 296 ரன்களுடனும் (274 மற்றும் 22 ரன்கள்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். மேலும், சுரேந்திர பாவே (292 ரன்கள்), அருண் லால் (287 ரன்கள்), விக்ரம் ரத்தோர் (286 ரன்கள்), வேணுகோபால் ராவ் (286 ரன்கள்) மற்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் (278 ரன்கள்) ஆகியோரும் ஒரே துலீப் டிராபி போட்டியில் அதிக ரன்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.

கடந்த 2023 ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய இஷான் கிஷன், வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை விளாசினார். மேலும், மூன்றாவது விக்கெட்டுக்கு ஷிகர் மோகனுடன் இணைந்து 170 பந்துகளில் 126 ரன்கள் சேர்த்தார்.

தனது முதல் துலீப் டிராபி போட்டியில் விளையாடும் ஷிகர் மோகன், முதல் இன்னிங்ஸில் 85 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 52 ரன்களும் எடுத்து அணிக்கு பலம் சேர்த்தார்.இஷான் கிஷனின் இந்த சிறப்பான ஆட்டத்தால் ஈஸ்ட் ஜோன் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையை எட்டியுள்ளதுடன், எதிரணியை விட 584 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.இன்னும் 5 விக்கெட்டுகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், துலீப் டிராபி இறுதிப்போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மட்டுமே பாக்கி இருப்பதால், 2026 துலீப் டிராபி சாம்பியன் பட்டத்தை ஈஸ்ட் ஜோன் அணி வெல்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.