📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 20, 2026 08:30 PM

"துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள்"

"துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள்"

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியதாக எழுந்த புகாரில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன் இன்று அதிகாலை அவரது இல்லத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

10 மணி நேர விசாரணை:

கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயனை போலீசார் அழைத்துச் சென்று, சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கின் விசாரணை நடைமுறைகள் முடிந்ததைத் தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்னதாக, மருத்துவப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் காவல்துறை பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

துப்பாக்கி முனை மிரட்டல் - எம்.எல்.ஏ. கூச்சல்:

மருத்துவமனை வளாகத்திற்குள் போலீஸ் வாகனத்தில் இருந்து மார்க்கண்டேயன் இறக்கப்பட்டபோது, அங்கு திரண்டிருந்த செய்தியாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களைப் பார்த்து அவர் திடீரென ஆவேசமாகக் கூச்சலிட்டார். "போலீசார் என்னை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டுகிறார்கள்!" என அவர் உரத்த குரலில் கத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனே அவரைப் போலீசார் சூழ்ந்து கொண்டு மருத்துவப் பரிசோதனை அறைக்குள் வேகமாக அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் சில நிமிடங்கள் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.

கைதுக்கான பின்னணி:

கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய மார்க்கண்டேயன், தமிழக முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஆளுங்கட்சியான தவெக நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி மாவட்ட போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்களும், திமுக தலைவர்களும் தவெக அரசிற்கு எதிராகத் தீவிர கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.